

துணிக்கடைக்குள் புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள், பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை மார்டன் தெருவில் வசிப்பவர் சத்தார் (68). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயலாளராக உள்ளார். இவரது மகன் லியாகத் அலி (34). இவர்களுக்கு மண்ணடி ராமசாமி தெருவில் ஜவுளிக்கடை உள்ளது. திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் துணி வாங்குவதுபோல கடைக்குள் 3 பேர் வந்தனர். ஒருவர் திடீரென கடையின் ஷட்டரை மூடினார். கடையில் இருந்த சத்தார், லியாகத் அலி ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து லாக்கரில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுக்கும்படி மிரட்டினர்.
சத்தார் மறுக்கவே அவரது தலையில் அரிவாளால் வெட்டினர். லியாகத் அலிக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் லாக்கரில் இருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு 3 பேரும் ஒரே பைக்கில் தப்பிச் சென்றனர். கடைக்குள் இருந்து வெளியே வந்த சத்தார் ‘திருடன்.. திருடன்’ என்று கத்தினார். எதிரே செல்போன் கடை வைத்திருக்கும் காஜாஷெரிப் என்பவர் கொள்ளையர்களை விரட்டிச் சென்றார். அவரையும் கையில் வெட்டிவிட்டு கொள்ளை
யர்கள் தப்ப முயன்றனர். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு கொள்ளையர்களை விரட்டினர்.
சிக்கிக் கொள்வோமோ என பயந்த கொள்ளையர்கள் பணத்தையும் பைக்கையும் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். கொள்ளையர்கள் வீசி எறிந்த பணம், காற்றில் பறந்து சாலை முழுவதும் விழுந்தன. விரட்டிச் சென்றவர்கள், பணத்தை எடுப்பதற்காக நின்று விட்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த முத்தியால்பேட்டை போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றியுள்ளனர். அதன் பதிவு எண்ணைவைத்து நடத்திய விசாரணையில் இரண்டு பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் வெட்டுக்காயம் அடைந்த சத்தார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும் வியாபாரிகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.