Published : 19 Nov 2014 10:30 AM
Last Updated : 19 Nov 2014 10:30 AM

கிசான் விகாஸ் பத்திர திட்டம்: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகிறது - தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சலர் தகவல்

இந்தியா முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த கிசான் விகாஸ் பத்திர சேமிப்பு திட்டம், தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் அதிகாரி டி.மூர்த்தி கூறினார்.

சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதுமுள்ள அஞ்சல் நிலையங்களில் ‘கிசான் விகாஸ் பத்திரம்’ திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த திட்டத்தை முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற பாஜக அரசு தனது முதல் பட்ஜெட்டில் கிசான் விகாஸ் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் அதிகாரி டி.மூர்த்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கிசான் விகாஸ் பத்திர திட்டம் மூலம் ரூபாய் ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் வரை ஒருவர் சேமிப்பில் ஈடுபடலாம். இந்த திட்டத்தை இரண்டு பேர் தொடங்கலாம். இதன் மூலம் 100 மாதங்கள் (8 வருடம் 4 மாதம்) கழித்து ஒருவர் செலுத்துகிற தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரத்தை வைத்து வங்கிகளிலும் கடன் பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வந்ததையடுத்து மீண்டும் கிசான் விகாஸ் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து இத்திட்டம் தமிழ்நாடு வட்டத்தில் இன்று (19-ம் தேதி) மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x