

பூங்காவில், அம்மா உணவகம் அமைந்தால், உணவு வகைகளை பார்வையாளர்கள் குறைந்த செலவில் சாப்பிட முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை
சென்னை மாநகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘அம்மா உணவகம்’ விரைவில் வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் தொடங்கப்பட இருக்கிறது.
சென்னை மாநகரில் திரையரங்குக்குச் சென்று சினிமா பார்க்க நினைத்தால் ஆயிரம் ரூபாய் இருந்தால்கூட போதாத நிலை மல்டிபிளக்ஸ் கலாச்சாரத்தால் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், செலவே இல்லாத மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதுகிறது. மெரினாவுக்கு அடுத்தபடியாக, சென்னையில் சிக்கனமான சுற்றுலாத் தலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்று சொல்லலாம்.
நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய இந்த பூங்காவில் வனவிலங்குகளைப் பார்த்து ரசிக்க மிகக் குறைந்த அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு வருகின்றனர்.
இந்த வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் ஒரே உணவகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் சிற்றுண்டியகம். இங்கு கட்டணம் அதிகம் இருப்பதாக பார்வையாளர்களிடம் லேசான அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், நுழைவுக்கட்டணம் மிகக் குறைவாக இருக்கும் இந்த பூங்காவில், அம்மா உணவகம் அமைந்தால், உணவு வகைகளை பார்வையாளர்கள் குறைந்த செலவில் சாப்பிட முடியும் என்று தமிழக அரசு கருதியது.
இத்திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தற்போது முன்வந்துள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் பூங்கா நிர்வாகத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நிர்வாகம் அங்கு, இடம் ஒதுக்கித் தர உடனே சம்மதம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள், ’தி இந்து’ நிருபரிடம் கூறுகையில், "குறைந்த விலையில் இட்லி போன்ற உணவு வகைகளை விற்கும் அம்மா உணவகம் இங்கு அமைவது பார்வையாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதற்காக பேட்டரி கார்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் ஒரு கட்டிடத்தை ஒதுக்கியுள்ளோம். வண்டலூர் உயிரியல் பூங்காவில் அம்மா உணவகம் விரைவில் செயல்படத் தொடங்கும்” என்றனர்.
வனவிலங்குகளை ரசிப்பதற்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் செல்வோர், இனி மிகக் குறைந்த செலவில் பசியாறலாம்.