Published : 26 Sep 2016 03:57 PM
Last Updated : 26 Sep 2016 03:57 PM

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும்: முத்தரசன்

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறிதும் அவகாசம் இன்றி, இரவோடு இரவாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது. சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியினர் விருப்பத்திற்கு ஏற்ப வார்டு ஒதுக்கீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வார்டு வாரியான பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே, ஆளும் கட்சியினருக்கு பட்டியல் கிடைத்து அதன் அடிப்படையில், கட்சிக்கான வேட்புமனுவைப் பெற்றனர்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சுயேட்சையான அமைப்பு என்று கூறப்பட்டாலும் அதன் செயல்பாடு அனைத்தும் சுதந்திரமானது அல்ல என்பதும், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

வார்டுகள் பட்டியல் வெளியிட்டதிலும், தேர்தலுக்கான தேதியை அறிவித்த முறையும் ஆளும் கட்சிக்கு எத்தகைய சாதகமான நிலைபாட்டை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடியும். உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெறாது என்று தொடக்கம் முதலே ஐயப்பாடு இருந்து வருவதை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உறுதிப் படுத்துகின்றன.

ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதற்கு மாறாக, குறுகிய நோக்கங்களுக்காக சிதைக்க முற்படுவது ஆரோக்கியமானதல்ல.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி வெற்றி, தோல்விகளை மக்கள் சுதந்திரமாக தீர்மானிப்பதற்கான வாசல்கதவுகளை மூடிவிட்டு கொள்ளைப்புற வழியாக வெற்றி பெற வேண்டும் என்று யார் முயன்றாலும் அது ஜனநாயகப் படுகொலையாகும்.

அத்தகைய ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சியினரையும். துணைபோக வேண்டாம் என தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொள்கிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x