

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனு குறித்து பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஏ.இ.செல்லையா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். முன் னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகவும், தியான் சந்த் பிறந்த நாள், விளையாட்டு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. அது போல சுதந்திரத்துக்காகப் போரா டிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை வழக்கறிஞர் தினமாக கொண்டாட வேண்டும்.
அதுதான் வழக்கறிஞர் தொழி லுக்கும், அவருக்கும் இந்த நாடு செய்யும் மரியாதையாக இருக்கும். எனவே அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை அகில இந்திய வழக்கறிஞர் தினமாக அனுசரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த நாட்டுக்காக பல தனிப்பட்ட மனிதர்கள், தலைவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். அவ்வாறு தியாகம் செய்த தலைவர்களை கண்டிப்பாக அரசு அங்கீகரித்து கவுரவிக்கவேண்டும். எப்படி அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும் என்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதேநேரம், மனுதாரர் இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பவில்லை. எனவே மனுதாரர் அனுப்பும் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.