

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை யும், ரயில்வே துறை நிதிநிலை அறிக்கையும் 92 ஆண்டுகளுக்குப் பிறகு இணைத்து தாக்கல் செய்யப் படுவதால், இதில் வெளியாக விருக்கும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாத ஊதியம் பெறு வோரிடம் இருந்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமானவரி விலக் குக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத் தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த் தப்பட்டது. அதன்பின் இன்று வரை வருமானவரி விலக்கு வரம்பு உயர்த் தப்படவில்லை.
எனவே, வருமானவரி விலக்கு வரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அத்துடன் வருமானவரி அளவை ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாகவும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20 சதவீதமாகவும், அதற்கு மேல் 30 சதவீதமாகவும் மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யவோ, அது சாத்தியமாகாத நிலையில் 5 சதவீதமாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறையை பொறுத்தவரை தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை நிதி இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அத்திட்டங்களை அடுத்த இரு ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கும் வகையில் அவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.