

தெற்கு ரயில்வே கால அட்டவணை ஆங்கிலத்தில் வெளி யாகி 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், தமிழில் ரயில்வே கால அட்டவணை வெளியிடுவதற்கான அறிகுறி கூடத் தெரியவில்லை.
தமிழில் வெளியிட தாமதம்
ரயில்வே கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத கடைசியில் நாடு முழுவதும் அந்தந்த ரயில்வே தலைமையிடங்களில் வெளியிடப்படும். மறுநாளில் இருந்து (ஜூலை 1) புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வந்துவிடும். அன்றிலிருந்து பெரிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை விற்பனை செய்யப்படும். ஆனால், பிராந்திய மொழியில் அச்சிடப்படும் ரயில்வே கால அட்டவணை வெளியிட தாமதம் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு ஆங்கில ரயில்வே கால அட்டவணை வெளிவந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், தமிழில் அச்சிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு, செகந்திராபாத்தில் அச்சிடப்பட்டு, தெற்கு ரயில்வேக்கு ஒரு லட்சம் ஆங்கில ரயில்வே கால அட்டவணைகள் வழங்கப்பட்டு, இப்போது விற்பனையில் உள்ளது.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்த ஆண்டு 3,500 தமிழ் ரயில்வே கால அட்டவணை புத்தகங்கள் ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. இன்னும் இரு வாரங்களுக்குள் அவை விற்பனைக்கு வந்துவிடும் என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களில், ஒரு கோடிப் பேராவது ரயிலில் பயணம் செய்வார்கள். அவர்களில் லட்சக்கணக்கானோருக்கு தமிழ் ரயில்வே கால அட்டவணை தேவைப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதற்கும் 3500 எண்ணிக்கையில் தமிழ் ரயில்வே கால அட்டவணை அச்சிடுவது, யானைப் பசிக்கு சோளப் பொறி போட்டது போலத்தான் இருக்கும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
ஏமாந்து போகும் பயணிகள்
தமிழில் ரயில்வே கால அட்டவணை வெளிவருவதற்குள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழ் கால அட்டவணை விற்கப்படுவதாக பிளாட்பாரம் டிக்கெட் விற்கும் இடத்தில் எழுதி வைத்துள்ளனர். அங்கு வரும் பலரும் தமிழில் கால அட்டவணை கேட்டுவிட்டு, ஏமாந்து போகிறார்கள்.