Published : 02 Jun 2016 07:32 PM
Last Updated : 02 Jun 2016 07:32 PM

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக முக்கிய சக்தியாக விளங்கும்: தமிழிசை நம்பிக்கை

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக முக்கிய சக்தியாக விளங்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ. 713 கோடியை மத்திய பாஜக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 62 ஆயிரத்து 307 டன் உணவு தானியங்களை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் 12, 13 தேதிகளில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழக சட்டப்பேரவைத் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய இருக்கிறோம். 234 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் அடங்கிய ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் எதிர்காலத்தை திட்டமிடுவோம்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக முக்கிய சக்தியாக இருக்கும். அதிமுக, திமுகவுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துவோம். கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம்.

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாள்கள் கடந்தும் காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை. முதல்வரை தேர்வு செய்தும் அமைச்சர்களை முடிவு செய்ய முடியவில்லை. தங்கள் கட்சிக்குள் இவ்வளவு குழப்பத்தை வைத்துக் கொண்டு பாஜகவை சோனியா காந்தி விமர்சிக்கிறார்.

தமிழக பாஜக தலைவர்களின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் பிரதமர் மோடி சேர்த்துள்ளார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி'' என்று தமிழிசை கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x