

நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப் படத்துக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் ‘கத்தி’ படத்தை திரையிடுவதாக இருந்த சத்யம் தியேட்டர் மீது கடந்த 20-ம் தேதி கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான அப்பு, ஜெயக்குமார் உள்ளிட்ட 12 பேர் தங்களை ஜாமீனில் விடக்கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அமர்வு நீதிபதி ஆதிநாதன் இந்த வழக்கை நேற்று விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் காரணங் களுக்காக இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதால் அனைவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரினார்.
மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் வாதிடும்போது, “மனு தாரர்கள் தியேட்டர் மீது தாக்குதல் நடத்தியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. இத்தாக்குதலால் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. 2 காவலர்கள் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆதிநாதன், 12 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரு வாரத்துக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போதும் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.