

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். ‘இறைவன் ஜோதி வடிவானவன்' என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகை யில் வடலூரில் சத்திய ஞான சபையை ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் நிறுவினார்.
ஏழை, எளிய மக்களின் பசிப் பிணியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தர்ம சாலையில் அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது. வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக் குப்பத்தில் சித்தி பெற்றார்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப் பூச திருவிழா சத்திய ஞானசபை யில் வெகு விமரிசையாக கொண் டாடப்பட்டு வருகிறது. 146-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற் றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் தொடங்கியது. 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அதிகாலை யிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை’ என்ற மகா மந்திரத்தை முழங்கியபடி ஜோதி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது.
ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட் டன. தைப்பூச ஜோதி தரிச னத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மது மற்றும் மாமிச கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேற்று நடந்த ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.