ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வாசன் கண்டனம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: வாசன் கண்டனம்
Updated on
1 min read

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 1,500 க்கும் அதிகமான மீனவர்கள் செப்டம்பர் 26 அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் பலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி இங்கிருந்து உடனடியாக புறப்படுங்கள் என மிரட்டல் விடுத்தனர். இதனால் தமிழக மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்து உடனடியாகப் புறப்படத் தயாராகினர்.

அப்பொழுது இலங்கை கடற்படை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, படகுகளில் இருந்த மீன்களை கடலில் வீசி எறிந்தனர். மேலும் படகுகளையும், மீன்பிடிச் சாதனங்களையும், கடலில் விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தினர். இந்த பயங்கரத் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மீனவர்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து கரைக்கு திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலால் தமிழக மீனவர்களின் ஒவ்வொரு படகிற்கும் குறைந்த பட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இது இலங்கை கடற்படையின் தொடர் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நஷ்டத்திற்கு உரிய தொகையை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் பொறுமை காக்க கூடாது. தமிழக அரசு மீனவர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் இரு நாட்டு மீனவப் பிரதிநிகளுக்கிடையே அடுத்தக்கட்டப் பேச்சு வார்த்தையை விரைந்து நடத்திட மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாக இந்திய வெளியுறவுத்துறை இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை முடியும் வரை தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எந்தவிதத்திலும் இடையூறு இருக்கக் கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாக நீண்டு கொண்டே போகின்றது. எனவே தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் தொடர்ந்து நடைபெற ஏதுவான ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி தந்தால்தான் மீனவர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in