Last Updated : 28 Oct, 2013 02:45 PM

 

Published : 28 Oct 2013 02:45 PM
Last Updated : 28 Oct 2013 02:45 PM

ஏற்காடு தேர்தல்: அசுர பலத்தில் அதிமுக; சொந்த பலத்தில் திமுக

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி வியூகம் அமைக்காமல் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தேர்தல் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதனால் ஏற்காடு தொகுதியில் வெற்றி பெறுவது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள், கடந்த ஜூலை மாதம் இறந்ததை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டவும், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தி.மு.க, ஆளுங்கட்சி அதிருப்தியை கணக்கீடு செய்து, சுயபலத்தை காட்டியும் களத்தில் குதித்துள்ளன.

இந்த இடைத்தேர்தல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் மாற்றத்துக்கு வித்திடக்கூடியதாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மிகப்பெரிய கூட்டணி வியூகத்தை அமைத்திட தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக அதன் தலைவர் கருணாநிதி, கட்சிகள் பேதமின்றி அனைத்து தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு சில தலைவர்கள் மசிந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை விட்டுவிட்டனர். பா.ம.க. நாடாளுமன்ற தேர்தலைக் குறி வைத்து செயல்படுவதால், இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. மேலும், எந்தக் கட்சிக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.

தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த் ஏற்காடு இடைத்தேர்தலில் எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வழக்கமான பாணியில், சோனியா அறிவிப்புக்காக காத்திருப்பதாகக் கூறிவருகின்றனர். பா.ஜ.க.வும் இந்த தேர்தலில் எந்த முடிவையும் ஆதரவையும் தெரிவிக்கவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய கட்சிகளும், பிரதான மாநில கட்சிகளும் ஏற்காடு இடைத் தேர்தல் களத்தில் குதிக்காமல், தொலைவில் நின்று அ.தி.மு.க., - தி.மு.க. நேரடி போட்டியைப் பார்க்க தயாராகி விட்டன. நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், உதிரி கட்சிகளின் ஓட்டு களும் சொந்த கட்சியின் ஓட்டு வங்கி, ஆளும் கட்சியின் சாதனை அல்லது அதிருப்தி ஆகியனவே, இவ்விரு கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கு கின்றன.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் கடந்த 2011-ம் ஆண்டு வரை நடந்து முடிந்த ஏற்காடு தேர்தலில் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும், நான்கு முறை தி.மு.க.வும் ஆறு முறை அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன. ஏற்காடு தொகுதியைப் பொருத்தவரை, அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதெல்லாம் தி.மு.க. வசப்படுத்தியுள்ளது.

தற்போது ஆட்சியில் அ.தி.மு.க. உள்ள நிலையில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலே, தி.மு.க. மாபெரும் வெற்றியாகக் கொண்டா டும் என்பதில் சந்தேகமில்லை.

களத்தில் 31 அமைச்சர்கள்!

இதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க.வின் கவலை. இதற்காக 31 அமைச்சர்கள் உள்பட 52 பேரை தேர்தல் பொறுப்பாளராகக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆளும்கட்சி அசுர பலத்தில் ஏற்காடு இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில், தி.மு.க. கடந்தகால சாதனைகளைப் பட்டியலிட்டு, ஆளுங்கட்சி மீதான எதிர் அலையை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடுகிறது.

ஏற்காடு இடைத்தேர்தலில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி வியூகத்தை அமைக்க, மற்ற கட்சித் தலைவர்கள் இடம் கொடுக்க வில்லை. இதனால் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகள் சொந்த பலத்தைக் காட்டி வெற்றிபெறும் முனைப்பில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x