Published : 18 Jun 2017 03:33 PM
Last Updated : 18 Jun 2017 03:33 PM

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா விவகாரத்தில் விசாரணை நியாயமாக நடைபெற முதல்வரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

ஆர்.கே.நகர் தொகுதி பணப் பட்டுவாடா விவகாரத்தில் வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணம் வினியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு பரிந்துரைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஒரு முதல்வர் ஆளாவது இதுவே முதல்முறை.

12.04.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு தலா.ரூ.4000 வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் பற்றி விளக்கமளித்த ஆணையம், 'ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தனர் என்று புகார்கள் வந்தன. இத்தகவல் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் ரூ.89 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

வட்ட வாரியாக, வாக்காளர் வாரியாக வழங்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கரின் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன' என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அப்போதே பாமக வலியுறுத்தியது.

ஆனால், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக காவல்துறைக்கு பரிந்துரைத்ததாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவருக்கு அளித்த பதிலில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த பிறகும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாத நிலையில், உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஆணையிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்குரைஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணம் ஒன்றில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையிலான 7 குழுக்கள் தான் பண வினியோகத்தை நடத்தியது எனக் கூறப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு 33,193 வாக்காளர்களுக்கு ரூ.13.27 கோடி கொடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வரும் அமைச்சர்களும் நேரடியாக பணம் கொடுத்தனர் என்பதற்கு இதைவிட ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இந்திய அரசியல் சாசனத்தின்படி முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியேற்றவர்கள் இப்போது அரசியல் சட்டத்திற்கு எதிரான வகையில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததன் மூலம் அமைச்சர்களாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(1)(A) பிரிவுகளின்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பது குற்றமாகும்.

இக்குற்றத்திற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 171(E), (F) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும். இதன்முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறிவிட்டது.

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும் கடமை தவறி விட்டது. வாக்காளர்களுக்கு பணம் வழங்கப் பட்டது என்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்ததுடன் கடமை முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் ஒதுங்கியிருக்கக் கூடாது. பணம் கொடுத்ததற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதை ஆணையம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற கடமைகளை செய்ய முன்வராத இந்தியத் தேர்தல் ஆணையம், அதன் மீது விமர்சனங்கள் எழும்போது மட்டும் பொங்கி எழுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆணையிட வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x