Last Updated : 11 Mar, 2014 12:00 AM

 

Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

280 பேரின் பதிவை ரத்து செய்ய பார் கவுன்சில் நடவடிக்கை

தமிழகத்தில் 30 வயதைத் தாண்டிய பிறகு எல்.எல்.பி. படித்து வழக்கறிஞர்களாகத் தொழில் செய்துவரும் 280 பேரின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் விதிகளை மீறி எல்.எல்.பி. எனும் சட்டப்படிப்பு படித்தவர்கள் தமிழகத்தில் வழக்கறிஞர்களாக தொழில் செய்ய தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் வி.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

30 வயதுக்கு உள்பட்ட வர்களைத்தான் சட்டப் படிப்பில் சேர்க்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில் 2008-ம் ஆண்டு விதியில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அந்த விதியை அமல்படுத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2009 ஜூன் மாதத்துக்குப் பிறகு வயது வரம்பு நிபந்தனையை மீறி எல்.எல்.பி. படித்து வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து தொழில் செய்து வருபவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், 2009 ஜூன் மாதத்துக்குப் பிறகு 30 வயதைத் தாண்டி எல்.எல்.பி. படித்து பார் கவுன்சிலில் பதிவு செய்து, தொழில் செய்து வருபவர்கள் 280 பேர் எனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் `தி இந்து’ செய்தியாளரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

வயது வரம்பு நிபந்தனையை மீறி எல்.எல்.பி. படித்து பதிவு செய்துள்ளவர்கள் அனைவரின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் 280 பேர் வயது வரம்பு நிபந்தனையை மீறி படித்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு விரைவில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x