டுவிட்டரில் அரசியல் செய்யும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்: புதுவை பேரவையில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

டுவிட்டரில் அரசியல் செய்யும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்: புதுவை பேரவையில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
Updated on
2 min read

ஆளுநர் கிரண்பேடி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டு செயல்படுவதாக பல்வேறு உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று பிரச்சினை எழுப்பினர். 'சட்டப் பேரவைக்குதான் அதிகாரமுள்ளது. டுவிட்டர் அரசியல் செய்யும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும்' என்றும் உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம்:

அன்பழகன் (அதிமுக):

டுவிட்டர் வலைப் பதிவில் ஆளுநர் அரசியல் செய்து வருகிறார். 'அரசை மீறி செயல்படுகிறார் ஆளுநர்' என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

அரசு கொறடா அனந்தராமன்:

ஆளுநர் தனது டுவிட்டர் பதிவில், 'எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' என பதிவிட்டுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கூறியுள்ளார். தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பேரவையில் ஆளுநர் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் ஆளுநரை வெளியேற்ற பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி:

துணைநிலை ஆளுநர் தொடர்பாக பேரவையில் விமர்சித்து பேசக்கூடாது.

லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்):

ஜனநாயகத்தில் நாடாளுமன்றம், சட்டப் பேரவைக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது. மரபை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

சட்டப்பேரவைக்கு சட்டத்தை நிறைவேற்ற தான் அதிகாரம் உள்ளது என டுவிட்டர் பதிவில் ஆளுநர் கூறுகிறார். புதுச்சேரி சட்டப்பேரவை, அரசின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

நம்முடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய வகையில் நாம் செயல்பட வேண்டும்.ஆளுநருக்கு வேறு எந்த அதிகாரத்தையும் தர முடியாத நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஆளுநர் மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பி உள்ளார். அவரது செயல்பாடு, எம்எல்ஏக்களின் உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

அரசு கொறடா அனந்தராமன்:

மக்கள் நலத்துக்கு தேவையான திட்டங் களை செயல்படுத்த முடியவில்லை. ஆளுநர் இணை அரசை புதுவையில் நடத்தி வருகிறார். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை அவர் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது செயல்பாடு தமிழின விரோத செயலாகும். அவரது செயல்பாட்டைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கான திட்டங்களை எம்.எல்.ஏக்கள் செய்வதில்லை என டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார் டெல்லியில் இரண்டு முறை அவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி:

அரசியல் சட்டத்தின்படி, ஆளுநர் செயல்பாடுகளை பேரவையில் விமர்சிக்கக்கூடாது.

இரா.சிவா (திமுக):

ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் மோதல், மக்கள் பணிகள் நடக்கவில்லை என ஊடகங்கள் கூறி வருகின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பேச உரிமை உள்ளது.

சர்வாதிகார போக்குடன் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை அழைத்து பேசுகிறார். எம்.எல்.ஏக்களுக்கு தெரியாமல் திட்டங்களை செயல்படுத்துகிறார். உச்சபட்ச அதிகாரம் உள்ளது போல் செயல்படுகிறார். மணக்குள விநாயகர் கோயில் யானை புதுவை மக்களுடன் 25 ஆண்டுகளாக உள்ளது. அதை காட்டுக்கு கொண்டு சென்று விடுமாறு ஆளுநர் எவ்வாறு கூறலாம்.

மாநில அரசின் மீது பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்கிறார். தான் மாநில நிர்வாகி என்பதை மறந்து செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாது. சுயமரியாதை, தன்மானத்தை இழந்துக் கொண்டு செயல்பட முடியாது.

ஜெயமூர்த்தி (காங்):

ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் அவரது செயல்பாடுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன்.

அரசு கொறடா அனந்தராமன்:

புதுச்சேரி அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட இல்லை. அரசில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி கூட இல்லை என இன்றைய டுவிட்டர் பதிவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்:

அவையில் இல்லாத நபரை பற்றி பேசக்கூடாது. அவரது ஆளுமை குறித்து பேசலாம்.

லட்சுமி நாராயணன், அனந்தராமன் :

நீதித்துறையை தூண்டிவிட முயற்சிக்கிறார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடிதம் எழுதி மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார். அதற்கு உரிய ஆதாரம் உள்ளது.

முதல்வர் நாராயணசாமி:

இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநர், முதல்வருக்கான அதிகாரங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் கோப்புகள் ஆளுநர் பார்வைக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். கொள்கை முடிவுகள் எடுப்பது, ஆளுநருக்கான அதிகாரம், முதல்வரின் அதிகாரம் பிரிவு 25-ன் கீழ் சட்ட ஆலோசனை பெறப்படும்.

துணைநிலை ஆளுநர் அவரது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும். அப்போது தான் நிர்வாகம் செம்மையாக நடைபெறும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படக்கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் புதுவையில் எம்.எல்.ஏக்கள் மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். ஆளுநர் தொடர்பாக தீர்மானம் மூலம் பேசலாம்.

என்.ஆர்.பாலன்:

ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவாதிக்கலாம்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in