திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு: ஸ்டாலின் உறுதி
Updated on
1 min read

திமுக ஆட்சிக்கு வந்தால் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தை திடீரென்று அவர்கள் துவங்கவில்லை. அரசுக்கு முறைப்படி அறிவிப்பு கொடுத்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கழக ஆட்சியின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டு அறிந்து அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண "கமிட்டி ஆப் அப்பீல்" என்று உயரதிகாரிகள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அந்த அமைப்பே செயல்படவில்லை. அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் முயற்சியே எடுப்பதில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்ஸுகள், தொழிலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆட்சியின் பாராமுகத்தால் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக அரசின் நிர்வாகத்திற்கு அழகல்ல.

ஜாக்டோ மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி அதிமுக அரசு சங்கங்களை அழைத்துப் பேசி தக்க தீர்வுகள் காண அக்கறையோடு முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தவறினால் மே-2016க்கும் பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி தீர்வு காணப்படும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in