

தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் 9 வெவ்வேறு சிறை பிடிப்புகள் மூலம் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத் தைச் சேர்ந்த 73 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, நீர்கொழும்பு சிறை களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆழ்கடல் விசைப்படகு மீனவ சங்கப் பிரநிதி களின் அவசரக் கூட்டம் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. மீனவப் பிரதிநிதி மகத்துவம் தலைமை வகித்தார் மீனவப் பிரதிநிதிகள் சேசு, எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இலங்கையில் உள்ள 73 தமிழக மீனவர்கள், 103 படகு களை விடுவிக்க வேண்டும். நான்காம்கட்டப் பேச்சுவார்த் தையை விரைவாக நடத்த வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
விசைப்படகுகள் நிறுத்தம்
அதன்படி நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி யது. இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க் கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழமற்ற பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி தளத்தில் இருந்து ஜூலை 9-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற படகுகளில் ஒரு படகு மட்டும் மறுநாள் கரை திரும்பவில்லை. இதனால், அந்த படகில் சென்ற மீனவர்கள் அர்ஜுனன் (49), காளிமுத்து(49), கோபி(25), டி.காளிமுத்து(35) ஆகியோரின் நிலை குறித்து கடலோரக் காவல் படை மற்றும் மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், காணாமல்போன மீனவர்களை மீட்கக் கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், சுமார் 19 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் விசைப்படகு பழுதாகி மூழ்கியதால், 4 மீனவர் களும் கடலில் தத்தளித்துள்ளனர்.
கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோரக் காவல் படையினரும், மீனவர்களும் படகில் சென்று, கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர்.