Last Updated : 20 Mar, 2014 12:00 AM

 

Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

நாமக்கல் தேமுதிக வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியது ஏன்?

நாமக்கல் மாவட்டத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளை தன் வசம் வைத்திருக்கிறது தேமு திக. இதன் காரணமாகவே தேமுதிக அறிவித்த முதல் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் நாமக்கல்லும் இருந்தது. நாமக்கல் தொகுதியில் போட்டியிட தேமுதிக-வில் பலரும் முட்டி மோதிக் கொண்டிருந்த நிலையில், கட்சியின் மாநில மாணவரணி நிர்வாகி மகேஸ்வரனை வேட்பாளராக அறிவித்தார் விஜயகாந்த். ஆனால், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக திங்களன்று திடீரென அறிவித்தார் மகேஸ்வரன். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களை அலசுகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவின் வேட்பாளரும் இதே மகேஸ்வரன்தான். முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான இவரது தந்தை நல்லதம்பி, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் நலச் சங்கத் தலைவராகவும் இருப்பதால் மாவட்டம் முழுவதும் அவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. இந்த கூடுதல் பலத்தால், தனித்து நின்றே 73 ஆயிரம் ஓட்டுகளை பெற்றார். இதனாலேயே இம்முறையும் மகேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், மகேஸ்வரன் தேர்தலில் நிற்பது அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை யாம். இதையடுத்தே உடல்நலம் பாதிக்கப்பட் டதாக கூறி கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் மகேஸ்வரன். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியி டுவதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார் என தேமுதிக வட்டாரம் தெரிவிக்கிறது.

இதுஒருபுறமிருக்க, நாமக்கல் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம் நாட்டுக் கவுண்டர் பிரிவைச் சேர்ந்தவர். திமுக வேட்பாளர் காந்திச்செல்வன் தொகுதியில் பரவலாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் பிரிவைச் சேரந்தவர். மகேஸ்வரனும் அதே பிரிவைச் சேர்ந்தவர். கொங்கு வேளாளக் கவுண்டரில் இருவர் போட்டியிட்டால் ஓட்டு பிரிந்து அதிமுக-வுக்கு சாதகமாக அமைந்துவிடும். என்று சொல்லி திமுக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாலேயே மகேஸ்வரன் பின்வாங்கியதாகவும் தேமுதிக-வின் ஒரு பிரிவினர் சொல்கிறார்கள்.

இதுகுறித்து மகேஸ்வரனிடம் கேட்டபோது, ’’தேர்தலில் போட்டி யிட விருப்பப்பட்டுதான் பணம் கட்டினேன். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். கேப்டன் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால், எனது முடிவை மாவட்டச் செயலாளர் சம்பத்குமார் மூலம் தெரியப்படுத்தினேன்’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x