

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் குறித்து தந்தை பெரியார் கருணாநிதியை பாராட்டினார். “கருணாநிதி ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள். 18 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் தமிழர்கள். அரசியலில் ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் நூற்றுக்கு நூறு தமிழர்கள் உள்ளனர். தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு கருணாநிதி ஆட்சியே காரணம்” என்று பாராட்டினார். திமுக ஆட்சி என்று சொல்லாமல் நம்முடைய ஆட்சி என்றே பெரியார் சொன்னார்.
கருணாநிதியின் 44-வது பிறந்த நாளில் அறிஞர் அண்ணா பேசும் போது, “என்னை முழுமையாக அறிந் தவர்கள்தான் கழகத்தில் உள்ளனர். அவர்களில் என்னை முற்றிலும் அறிந்தவர்களில் கருணாநிதிக்கும் இடம் உண்டு. என்னை முழுதும் அறிந்து, உள்ளத்திலே உள்ள எண்ணங்களை அறிந்து சொல்லக் கூடியவர் அவர். இப்போது செய்துள்ள காரியங்களைவிட மேலும் பல மடங்கு காரியங்கள் அவரது திறமையின் மூலம் செய்யப்படவேண்டும். அவரிடம் இருந்து நாமும் நாடும் நிறைய எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தொட்ட ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தொட்ட துறைகளில் எல்லாம் அதன் எல்லையை தொட்டவர். அரசியலில் அவர் தலைவர். எழுத்துலகில் அவர் சக்கரவர்த்தி. 100 ஆண்டுகள் ஆன திராவிட இயக்கத்தில் 50 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர். குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை எடுத்தார். குறள் மீது அவர் கொண்ட காதல் அந்த முக்கடலுக்கு ஒப்பானது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தது அவர் தமிழுக்கு செய்த தொண்டில் தலையானது.
பெரியாரைப் போல் பிறந்து வாழ்ந்த பெருமைக்குரியவராக திகழ்ந்த அவர், அண்ணாவை போல எல்லாரையும் வசப்படுத்தி, தன்னோடு சேர்த்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர். கருணாநிதியை போல ஒரு தலைவர் தமிழகத்திலும் இல்லை, அகில இந்தியாவிலும் இல்லை. பண்டித நேருவுக்கு பின்னால் அண்ணா என்று நாம் சொல்லிக் கொண்டாலும், அண்ணாவைவிட பரந்த, சிறந்த தலைவராக கருணாநிதி திகழ்கிறார் என்பதை பெருமையோடு சொல்கிறேன். அவர் பல்லாண்டு வாழ்க.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.