சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

காவல்துறையினர் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பெண் பொறியாளர் சுவாதியைக் கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் குறுகிய காலக்கெடுவிற்குள் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு 6 நாட்கள் ஆகியும் இன்னும் அவரை கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் கண்டுபிடிக்காமல் இருப்பது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தக் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காவல் துறையினர் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி குறுகிய காலக்கெடுவிற்குள் இந்தக் கொடூரமான கொலையை செய்த நபரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கொலையாளிக்கு உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

மேலும், சுவாதியின் கொலை சம்பந்தமாக தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு காவல் துறையினர் உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற தவறான செய்திகள் இனி வரும் காலங்களில் வெளிவராமல் தடுக்க முடியும்.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அவர்கள் அதிகமாக நடமாடும் நேரங்களிலே காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். காவல் துறையினர் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மத்திய அரசு நம் நாட்டில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும், மாநில அரசு தமிழகத்தில் பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலும் சிசி டிவி கேமராவைப் பொறுத்த கூடிய நிலையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி ஒரு போதும் நம் நாட்டில் எங்கும் நடைபெறாமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in