

திமுக எம்.பி.யும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்கு ஜனவரி 5-ம் தேதி 46-வது பிறந்த நாள். இது தேர்தல் ஆண்டு என்பதால் கனிமொழியின் பிறந்த நாளை இன்னும் கூடுதல் உற்சாகத் துடன் கொண்டாட தொண்டர்கள் தயாராகி வருகிறார்கள்.
மாவட்டந்தோறும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கனிமொழிக்கு மரச்சிற்ப பரிசு
கனிமொழி மகன் ஆதித்யனுடன் இருப்பதுபோல ‘ரோஸ்வுட்’டில் செதுக்கப்பட்ட மரச் சிற்பத்தை தஞ்சை சங்கமம் கலைக் குழுவினர் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து கனிமொழியிடம் வழங்கு கிறார் கிள்ளை ரவிந்திரன்.சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லையைச் சேர்ந்த மாற்றுத் திறன் கலைஞரான கேசவன் என்பவர் இந்த மரச் சிற்பத்தை செதுக்கி இருக்கிறாராம்.
இருளர்களுக்கு உதவிகள்
அதே தினத்தில் கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரில் வசிக்கும் பழங்குடி மக்க ளான இருளர்களுக்கு ரூ.2 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் ஒருவார காலத்துக்கு கனிமொழி பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடாகி இருக்கிறது. சி.ஐ.டி. காலனியில் ரத்ததான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலையில் கருத்தரங்கு
மாலை 6 மணிக்கு டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில், கனிமொழியின் அரசியல் பணி, இலக்கியப் பணி, கலைப்பணி என்ற தலைப்புகளில் திருச்சி சிவா, கலை மாமணி கவிஞர் தாயன்பன், கவிஞர் இளையபாரதி பேசுகின்றனர்.