

மணல் படுகைகள், சகதி மற்றும் ஆழமான பள்ளங்கள் நிறைந்துள்ள தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இதை தடுக்க, காவல்துறையினர் கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
தனுஷ்கோடி கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. ஏப்ரல், மே மாத கோடை விடுமுறை நாட்கள் தொடர உள்ளதால், பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
தனுஷ்கோடி கடற்பகுதியில் மணல் படுகைகளும், பள்ளங்களும் அதிக அளவில் இருக்கும். கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் இதில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மக்களுக்கு இது குறித்து தெரியும். ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விஷயம் தெரியாததால், பலரும் ஆபத்தை உணராமல் கடலில் இற ங்கி குளிக்கின்றனர்.
இதுகுறித்து தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:
தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. கடற்பகுதியில் மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி இறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் தனுஷ்கோடி, மூன்றாம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறையினரால் அமைக்கப் பட்ட எச்சரிக்கை பலகையை பொருட்படுத்தாமல் தடையை மீறி ஆபத்தை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கின்றனர். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் சராசரியாக நாளொ ன்றுக்கு ஐந்து ஆயிரம் பேர் இங்கு வந்து செல்வார்கள். அவர்களின் பாதுகாப்பைக் கருதி, கடற்கரையில் குளிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகையை பல இடங்களில் அமைக்க வேண்டும். அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாரும் கடலில் இறங்கி குளித்துவிடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.