Published : 15 Nov 2014 03:51 PM
Last Updated : 15 Nov 2014 03:51 PM

சமசுகிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்: வைகோ

மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு, சமசுகிருதமயமாக்குதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அதன் நிர்வாக அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்படும் ஜெர்மன் மொழியை அறவே நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக சமசுகிருத மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் அக்டோபர் 27-ல் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது என்ற நோக்கத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதியிட்ட கேந்திரிய வித்யாலயா சங்காதனின் சுற்றறிக்கையிலும் மத்திய அரசின் கொள்கை முடிவு சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது 1092 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்க ஜெர்மனி கதே பயிற்சி நிறுவனத்துடன் 2011 செப்டம்பரில் கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அயல்நாட்டு மொழிகளைக் கற்பிக்கலாம் என்ற கொள்கை முடிவை மேற்கொண்டது. இதன் அடிப்படையில்தான் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. தற்போது திடீரென்று ஜெர்மன் மொழி பயிற்றுவிப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதியிலேயே ஜெர்மன் மொழி பயின்று வருவதை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கல்வி கற்பிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. அரசு விரும்பினால், தாய்மொழிவழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, சமசுகிருத மொழியைத் திணிக்க முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

பா.ஜ.க. அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்தி மொழி திணிப்பு, சமசுகிருத மயமாக்குதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசுப் பள்ளிகளில் ‘சமசுகிருத வாரம்’ கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியது; ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ என்று சமசுகிருத மொழியில் பிரகடனம் செய்தது; சமசுகிருதத்தை எல்லா மொழிகளுக்கும் தாய் என்று குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பியது; சமசுகிருத மொழியை அன்றாட வாழ்வுடன் இணைப்பது எப்படி என்பது குறித்து மாணவர்கள் சமசுகிருத பண்டிதர்களுடன் கலந்துரையாட எற்பாடு செய்ய வேண்டும் என்றது; சமசுகிருதச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் விதமாக கணினி விளையாட்டுகளை உருவாக்குவது; சமசுகிருத மொழித் திரைப்படங்களான ஆதிசங்கரர், பகவத் கீதை போன்றவற்றை திரையிடுவது போன்ற உத்தரவுகள் அனைத்தும் மோடி அரசின் ‘சமசுகிருத மயமாக்கல்’ திட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மூலம் சமசுகிருத மொழித் திணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய ‘சமசுகிருத மயமாக்கல்’ நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x