

காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு ஜீப்பை கடத்திச் சென்ற இளைஞர் பெற்றோர் பராமரிப்பு இல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வாலாஜா சுங்கச் சாவடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீதாராமனை கத்தியால் குத்திய இளைஞர், போலீஸ் ஜீப்பை கடத்திச் சென்றார். சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேலூர் அருகே அந்த இளைஞரை கைது செய்தனர். ஆய்வாளரை கத்தியால் குத்திய இளைஞர் ஆல்பிரட் ஜான் பால் என்ற 19 வயது இளைஞர் என தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வேலூர் பாஸ்டல் சிறையில் அடைக்கப்பட்ட ஜான் பால் குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஜான் பாலின் பெற்றோர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரம் செய்ய பெங்களூருவுக்கு சென்றுவிட்டனர். மாதத்தில் 10 நாட்கள் மட்டும் வேலூரில் தங்கி இருப்பார்கள். பெற்றோர் பராமரிப்பு இல்லாமல் வளர்ந்த ஜான்பாலுக்கு நண்பர்கள் மட்டுமே வாழ்க்கையாக மாறிவிட்டது.
பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த ஜான்பால், வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை செய்தார். நாளுக்கு நாள் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமானதால், மது பழக்கத்துக்கு அடிமையானார். கடந்த 18-ம் தேதி இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர், வேலூர் சத்துவாச்சாரி முருகன் திரையரங்கம் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனத்தை கள்ளச் சாவியைப் பயன்படுத்தி திருடியுள்ளார்.
பின்னர், பொய்கை அருகே சரக்கு ஆட்டோவை நிறுத்தி ரூ.100 பணம் பறித்துள்ளார். பணம் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் ஆட்டோவை பின் தொடர்ந்துள்ளார். வாலாஜா சுங்கச் சாவடியில் ஆய்வாளர் சீதாராமனிடம் ஆட்டோ ஓட்டுநர் புகார் தெரிவிக்க, ஜான் பால் சிக்கினார்.
அவர் வந்த இருசக்கர வாகன எண் போலியானது என உறுதியானதால், ஜான் பாலை பிடித்து ஜீப்பில் உட்கார வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்தார். முதல் முறையாக போலீஸில் சிக்கியதால் பயந்துபோன ஜான்பால், ஸ்டிக்கர் வெட்ட பயன்படுத்தும் சிறிய கத்தியால் சீதாராமனைக் குத்திவிட்டு ஜீப்பை கடத்தியுள்ளார். தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் இந்த நிலைக்கு வந்ததாக வருந்தினார்’’ என்றனர்.