Published : 20 Sep 2016 02:48 PM
Last Updated : 20 Sep 2016 02:48 PM

ரூ.546 கோடியில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் ரூ.546 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டின் பொருளாதாரம் சிறக்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும், தொழிற்கல்வி அவசியம் என்பதால், எனது தலைமையிலான அரசு தொழிற்கல்வியை ஊக்குவிப்பதிலும், தொழிற் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

1. எங்களது தேர்தல் அறிக்கையில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், 'அம்மா இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் பயிற்சி மையம்' ஏற்படுத்தப்பட்டு, குறுகிய கால பயிற்சி வழங்கப்படும்; இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் துவங்க உதவிகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.

அதன்படி, முதற்கட்டமாக இந்த ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் இரு சக்கர வாகன பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நிலையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ஒவ்வொன்றிலும் 30 பேருக்கு 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். இத்திட்டம் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

2. எங்களது தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அதன் மூலம் வேலை பெறுவதற்கும், சுய தொழில் புரியவும் வழிவகை காணப்படும். ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்ப் பகுதிகளில் இதற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.

மாநிலத்தில் வழங்கப்படும் அனைத்து திறன் எய்தும் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் 2013-ஆம் ஆண்டு முதல் ஒரு சிறப்பு நோக்க அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், மாநிலத்தின் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் படிப்படியாக பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இரண்டு விதமான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

அதாவது, 10-வது மற்றும் 12-வது வகுப்பில் தேர்வானவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதுவன்றி, சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும் அடிப்படை பயிற்சியும் அளிக்கப்படும்.அந்த வகையில், இந்த வருடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள 60 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 60 நபர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 3,600 பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.2 கோடியே 94 லட்சம் செலவிடப்படும்.

மேலும், சேவைத்துறை பணிகளான விற்பனையாளர், கணக்காளர், பாதுகாப்பு சேவை புரிபவர், செவிலியர் / சுகாதார உதவியாளர் மற்றும் நிறுவன நேர்த்தி போன்ற பணிகளுக்கான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 20,000 இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த பயிற்சி திட்டம் ரூ.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

3. தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் சீமென்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிடெட் உடன் இணைந்து ஒரு திறன் மையம் மற்றும் அதனுடன் ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் ரூ.546 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த திறன் மையம் மற்றும் 5 தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களுக்கு மாநில அரசின் பங்காக ரூ.54 கோடியே 68 லட்சம் வழங்குவதற்கும் அனுமதி அளித்து நான் உத்தரவிட்டுள்ளேன்.

இத்திட்டத்தின்கீழ்,தேவைப்படும் ஆய்வகங்களுக்காக தொழில்நுட்ப கல்வி வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஹப் & ஸ்போக் மாடல் மத்தியில் ஒரு திறன் மையமும் அதனுடன் இணைந்த ஐந்து தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களும் ஏற்படுத்தப்படும். மத்தியில் அமையவுள்ள திறன் மையமானது அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. வளாகத்தில் ஏற்படுத்தப்படும். தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி, தரமணி, அண்ணா பல்கலைக் கழக கல்லூரி, காஞ்சிபுரம், அண்ணா பல்கலைக் கழக கல்லூரி, விழுப்புரம், முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, ஆவடி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.

முதல் மூன்று வருடங்களுக்கான செயல்முறைச் செலவை சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் மேற்கொள்ளும். மூன்று வருடங்களில், இம்மையங்களில் பயிற்சி பெறுவோர் பிற நிறுவனங்களுக்கு அப்பயிற்சிகளை அளிப்பர்.

4. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 232 கோடியே 92 லட்சத்து 68 ஆயிரத்து 695 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் 7 லட்சத்து 16 ஆயிரத்து 602 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டுமானத் தொழில் தொடர்பான திறனை மேம்படுத்தவும், தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் மறுபயிற்சி அளிக்கும் நோக்கிலும் தமிழ்நாடு கட்டுமானக் கழகம் 4.1.2013 அன்று எனது தலைமையிலான அரசால் நிறுவப்பட்டது.

இக்கழகத்தின் வாயிலாக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் மின்சாரப் பயிற்சி, வர்ணம் பூசுதல், மரவேலை, கட்டுமானம், கம்பி வளைத்தல், கொத்து வேலை, நில அளவை, குழாய் பொருத்துதல் மற்றும் பிற தொழிற்பிரிவுகளில், குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இடையேயான தொடர்புகளை உருவாக்கி, பல்வேறு கட்டுமானத் தொழிற் பிரிவுகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் ஒன்றினை ஏற்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில், தமிழ்நாடு கட்டுமானக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில், 25,388 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.28 கோடி செலவில் இந்த கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் கன்ஸ்ட்ரக்சன் இன்டஸ்ரி டெவலப்மென்ட் கவுன்சில் நிறுவனத்தால் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்துடன் இணைந்து பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முறை அடிப்படையில் அமைக்கப்படும்.

இந்த பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்கப்படும் கட்டுமானத் தொழில் தொடர்பான திறன் பயிற்சிகளும் வழங்கப்படும். இப்பயிற்சி நிலையத்தின் மூலம் வருடத்திற்கு சுமார் 5,000 நபர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். இப்பயிற்சி நிலையத்தால் வழங்கப்படும் பயிற்சியின் தரம் மற்றும் மேம்பாடு குறித்து திறனாய்வு செய்ய மேலாண்மை குழு ஒன்றினை தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் இன்டஸ்ரி டெவலப்மென்ட் கவுன்சில் நிறுவனங்கள் இணைந்து உருவாக்குவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

5. தமிழ்நாட்டில் தற்பொழுது 216 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் 10 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,81,680 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 33 புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், 50,253 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 42 புதிய பகுதிகள் ஏற்கனவே இயங்கி வரும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களுடன் இணைக்கப்பட்டு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், இந்த ஆண்டு ஊத்துக்குளி, துரைசாமிபுரம், மண்ணச்சநல்லூர், கல்பாக்கம், மகாபலிபுரம், அத்திப்பட்டு, குளத்தூர், திருமுடிவாக்கம், பண்ருட்டி, பெருமாநல்லூர் மற்றும் குலசேகரம் ஆகிய 11 இடங்களில் புதிதாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் துவங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகங்கள் ரூ.12 கோடியே 70 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, திறன் நிறைந்த தொழிலாளர் சமுதாயம் உருவாவதுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் வழிவகை ஏற்படும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x