

யானைகளின் புகலிடம் என்று அழைக்கப்படும் முதுமலை அருகே உள்ளது மசினக்குடி. இதனை மையமாகக் கொண்ட வாழைத்தோட்டம், ஆனைகட்டி, மாவனல்லா, மாயாறு, பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்தது.
வனப் பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்த பல்லாயிரக்கணக்கான நாட்டு மாடுகள் தினமும் 5 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் தந்தன. இதையடுத்து, மசினக்குடி, வாழைத்தோட்டம், மாயாறு, ஆனைகட்டி, பொக்காபுரம், மாவனல்லா பகுதிகளில் ஏராளமான பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாகின.
வாழைத்தோட்டம் கிராமத்தில் 16 ஏக்கரில் பால் குளிரூட்டும் நிலையம் தொடங்கப்பட்டது. மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தரமான, அதிகமான பால் உற்பத்தி தொடர்பாக 3 முறை மாநில அளவில் முதலிடம் பிடித்து, பல்வேறு விருதுகளைப் பெற்றது.
இந்த நிலையில் ஜெர்சி இன மாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் கால்நடைத் துறையினர். இதனால் நாட்டு மாடுகள் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆனால், தட்பவெப்ப நிலை மாறுதல், பராமரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ஜெர்சி மாடுகளை வளர்க்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதையடுத்து, பல பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூடப்பட்டன.
மசினக்குடி சங்கம் மட்டும் பெயரளவுக்கு இயங்கி வந்தது. இந்த நிலையில், விவசாயிகள் மீண்டும் நாட்டு மாடுகள் வளர்ப்புக்கு மாறியதால், தினமும் 2 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் என்ற அளவுக்கு மசினக்குடி பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்படத் தொடங்கியது.
எனினும், மேய்ச்சலுக்கு வனத் துறை கொடுக்கும் நெருக்கடியாலும், பாலுக்கு உரிய விலை கிடைக்காததாலும் நாட்டு மாடு வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்குமாறும் கால்நடை வளர்ப்போர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.
வறட்சியால் இறக்கும் மாடுகள்
எனினும், அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நீடிப்பதால், சுற்றுவட்டாரப் பகுதியில் மேய்ச்சல் வசதியின்றி மாடுகள் இறப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
மேய்ச்சல் பகுதிகளில் புல்லும், குடிக்க நீரும் இல்லாமல் ஆங்காங்கு மாடுகள் இறப்பதாகவும், அவற்றை அப்புறப்படுத்தக்கூட வசதியின்றி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தவிப்பதாகவும் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்கு சிறு தீர்வை அளிக்க முன்வந்துள்ளார் நஹினா ரெட்டி என்ற பெண். பசியால் இறக்கும் மாடுகளைப் பாதுகாக்க புற்களை வாங்கி, லாரிகள் மூலம் கிராமம் கிராமமாக கொண்டுசெல்கிறார். மேலும், அவற்றை மாடு வளர்ப்போருக்கு இலவசமாக வழங்குகிறார்.
பொக்காபுரத்தை சேர்ந்த இவரது செயல்பாடுகளால் நூற்றுக்கணக்கான மாடுகள் தப்பிப் பிழைத்துள்ளன என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் நஹினா ரெட்டி கூறியதாவது: நான் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவளோ, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளோ அல்ல. சிறிய அளவில் தங்கும் விடுதி நடத்தி வருகிறேன். பிராணிகள் நல அமைப்பின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எனினும், அதற்கும், மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என் வீட்டுக்கு பின்புறம் ஒரு குடும்பத்தினர் சில மாடுகளை வளர்த்தனர். அவை தீவனமின்றி எலும்பும், தோலுமாக சாகும் தருவாயில் இருந்தன. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “வனப் பகுதியில் புல் கிடைக்கவில்லை. நிறைய மாடுகள் தீவனமின்றி இறந்துவிட்டன. அவற்றைப் புதைப்பதற்குக்கூட மக்களிடம் பணம் இல்லை. எலும்பும், தோலுமாக இருப்பதால் அடிமாடுகளை வாங்க வருவோர்கூட இவற்றைச் சீந்துவதில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாடு வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர். வசதி இல்லாதவர்கள். மாடுகள்தான் அவர்களுக்கு ஜீவாதாரம்” என்று தெரிவித்தனர். இதனால் நான் மிகவும் மனம் வருந்தினேன். பின்னர், எனது பணத்தைக் கொண்டு புல் கட்டுகளை வாங்கி மாடுகளுக்குக் கொடுத்தேன். பல இடங்களில் பழங்குடி மக்கள் மாடுகளுக்கு புல் வாங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒரு லாரி லோடு புல்லுக்கட்டு வாங்கி அவர்களுக்கு வழங்கினேன். இதனால், பொக்காபுரம் பகுதி மாடுகள் பயனடைந்தன. இதுகுறித்து எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் உதவினர். தொடர்ந்து லாரிகளில் தீவனம் வரவழைத்து, மாடுகளுக்கு வழங்கி வருகிறேன். மேலும், பிராணிகள் நல அமைப்பு மூலம் நடத்திய நாய்கள் கண்காட்சி மூலம் கிடைத்த தொகையை, அமைப்பின் உறுப்பினர்களின் சம்மதத்துடன் இதுக்குப் பயன்படுத்தத் தொடங்கினேன்.
20 நாட்களாக உதவி
இவ்வாறு கடந்த 20 நாட்களாக கிராமம் கிராமமாகச் சென்று கால்நடைகளுக்கு உணவு வழங்குகிறேன். அங்குள்ள பெண்களிடம் தீவனப்புல்லை பிரித்துக்கொடுத்து, மாடுகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு பகுதியிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் தீனவப்புல் வாங்குகிறேன். எனது சேவையைப் பார்த்த அவர்கள், குறைந்தபட்ச விலைக்கு புல் வழங்குகின்றனர். ஒரு லோடு புல்லின் மதிப்பு ரூ.10 ஆயிரம். 40-50 கட்டு புல் கிடைத்தால் 2 அல்லது 3 மாடுகளுக்கு ஒரு வாரத்துக்குப் போதுமானது. ஒரு கிராமத்துக்கு ஒரு லோடு புல்லைக் கொடுக்கிறோம். மீண்டும் ஒரு வாரத்துக்குப் பின்னர் அவர்களுக்கு புல் கொடுக்கிறோம். பிராணிகள் மீது அக்கறையுள்ளவர்கள் ஒன்றிணைந்தால், இதுபோல மாடுகளைப் பாதுகாக்கலாம்” என்றார்.
“தமிழகத்தின் தண்ணீர்த் தொட்டியாகக் கருதப்படுபவை நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகள். அங்கேயே தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இங்கு உலவும் மான், கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குகள்கூட தீவனம் கிடைக்காமல், கர்நாடாகவின் கபினி, கேரளாவின் வயநாடு பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. சில மிருகங்கள் தண்ணீருக்காக ஊருக்குள் நுழைகின்றன. சில நாட்களுக்கு முன் யானைக் கூட்டம் பொக்காபுரம் தண்ணீர்த் தொட்டிக்கே வந்து, தண்ணீரைப் பருகின. அவற்றை விரட்ட மிகவும் சிரமப்பட்டனர். மற்றொரு யானை பொக்காபுரத்தில் தண்ணீர்த் தொட்டிக்குச் செல்லும் குழாயை உடைத்து, தண்ணீரை உறிஞ்சிக் குடித்துள்ளது. குடிநீர்ப் பிரச்சினைக்கு அரசு நிரந்தரத் தீர்வுகாண வேண்டியது அவசியம்” என்று கூடலூர், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.