Published : 26 Nov 2013 10:38 AM
Last Updated : 26 Nov 2013 10:38 AM

கெயில் பிரச்சினையில் மேல்முறையீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்ப்டும் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விதித்திருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களின் வழியாக எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த கெயில் நிறுவனம், இது குறித்து விவசாயிகளுடனோ அல்லது உழவர் சங்கங்களுடனோ கலந்தாய்வு நடத்தாமல் தன்னிச்சையாக பணிகளைத் தொடங்கியது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களுக்கு சில லட்ச ரூபாயை மட்டும் இழப்பீடாக அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களில் காவல்துறை உதவியுடன் குழாய்களை பதிக்கத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தடியடி நடத்தி விரட்டியடிக்கப்பட்டனர்.

கெயில் நிறுவனத்தின் தன்னிச்சையான நடவடிக்கைக்கும், அதற்கு தமிழக அரசு துணை போவதற்கும் அப்போதே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். விவசாயிகளும் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். மக்கள் போராட்டத்திற்கு பிறகே எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், கெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்தடையை உயர்நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தபோது, உழவர்களைக் கட்டாயப்படுத்தி எரிவாயுக்குழாய்களைப் பதிக்கக்கூடாது & வாய்ப்பு இருந்தால் நெடுஞ்சாலை ஓரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆராய வேண்டும் என கெயில் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அதற்கு நேர்மாறான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், யாருடைய நலனுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பு வெளிவந்திருக்காது.

பொதுநலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஐந்து லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து எரிவாயுக் குழாய் பாதை அமைப்பதில் என்ன பொதுநலன் இருக்கிறது? என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இப்பிரச்சினையில் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஆரம்பம் முதலே இப்பிரச்சினையில் தமிழக அரசு இரட்டை நிலையை தான் கடைபிடித்து வந்தது. இந்த நிலைப்பாடு தான் விவசாயிகளுக்கு இப்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தொழில்வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. ஆனால், வேளாண் விளைநிலங்களில் எரிவாயுக் குழாய்கள் புதைக்கப்பட்டால் , அந்தப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படும் என்பது தெரிந்தும் அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கான எரிவாயுக் குழாய்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் தான் புதைக்கப்பட்டுள்ளனன. அதேபோன்று தமிழகத்திலும் செய்யலாம் என்ற மாநில அரசின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள கெயில் நிறுவனம் மறுப்பதும், அந்த நிறுவனத்தின் விருப்பப்படியே செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிடுவதும் விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகும்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்தும்படி கெயில் நிறுவனத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x