

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் விசாரணைக்கு உட் படுத்தப்பட்ட வழக்கறிஞர் மாளவியாவை பெண் எஸ்ஐயின் புகாரின்பேரில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்துவந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, சில மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் நண்பர் என்ற முறையில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி போலீ ஸார் பலமுறை விசாரணை நடத் தினர்.
இந்நிலையில் மதுரை அவனியா புரம் எஸ்ஐ சத்யபாமாவின் புகாரின்பேரில் வழக்கறிஞர் மாளவி யாவை மதிச்சியம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். உதவி ஆய்வாளர் சத்யபாமா(27) சில நாட்களுக்கு முன்பு இரவு இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்துவ மனை சாலையில் சென்றார். பின்தொடர்ந்த மதுரை வழக்கறிஞர் மாளவியா(35) உதவி ஆய்வாளரை முந்திச்சென்று வழிமறித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பெண் உதவி ஆய்வாளர் மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ‘‘சில மாதங்களுக்கு முன், வழக்கு தொடர்பாக மதுரை நீதி மன்றத்துக்கு வந்தபோது, மாளவி யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைவிட்டு விலகினேன். இந்நிலையில், இருசக்கர வாகனத் தில் சென்ற என்னை வழிமறித்து தகராறு செய்தார். என்னை கீழே தள்ளியதில் காயம் ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியிருந்தார். இது தொடர்பாக மதிச்சியம் இன்ஸ்பெக்டர் சாந்தி, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மாளவியாவை நேற்று முன்தினம் கைது செய்தார்.
முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக ஜீப் டிரைவர் பால்பாண்டி புகார் கொடுத்தார். அரசு சொத்தை சேதப் படுத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிந்தனர்.
நீதிமன்றத்தில் மனு
இதனிடையே போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும், தன்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக் கோரியும் மாளவியா உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், மதுரை சிறையில் அடைக் கப்பட்டுள்ள மனுதாரர் மாளவி யாவை பார்வையிட்டு அவரது உடல் நிலையை பரிசோதித்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.