

நாட்டின் பொருளாதார பின்னடைவு மற்றும் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி ஆகியன தமிழக பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இன்று இரண்டாவது நாளாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, மாநில பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்துடன், 2012-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி மாநிலத்தின் வளர்ச்சியை, குறிப்பாக விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையை பாதித்தது.
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி மீண்டும் உயர் வளர்ச்சிக்கான பாதையில் கொண்டுசெல்ல தேவையான முயற்சிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் மூலம் 2013-2014-ம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்கை எட்ட முடியுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழகத்தில் சரிசமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான அடிப்படையை நான் தேர்ந்தெடுத்தேன். வளர்ச்சி திட்டத்தில் ஒருவரும் விடுபடாமல் இருப்பதை மாநிலம் உறுதி செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், மகளிர், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து பிரிவினரும் அனைத்து திட்டங்களும் சென்றடையும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் குறித்து பொதுநிர்வாகத் துறையை சேர்ந்த ஒரு அறிஞர் குறிப்பிட்டதை உங்கள் கவனத்துக்குகொண்டு வருகிறேன்.
"மாவட்ட ஆட்சியர்கள் என்பவர்கள் அரசின் நிர்பந்தம் செய்யக்கூடிய சாதனம் அல்ல, அரசின் உதவிக்கரம் என்று மக்கள் கருதுகிறார்கள். அவர் முதன்மையாக ஒரு நல அதிகாரி. இயற்கை பேரழிவுகள், உள்ளூர் நெருக்கடிகள் மற்றும் தனிப்பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றின் போது நிவாரண உதவி அளிப்பவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது."
இத்தகைய வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் செயல்பாடு இருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.
எனது அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் மூலம் உரிய பயனாளிகளுக்கு எந்த வகையில் சென்றடைந்தது என்பது குறித்தும் உங்கள் மூலம் அறிவதற்கும் விரும்புகிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.