Published : 26 Jun 2017 11:11 AM
Last Updated : 26 Jun 2017 11:11 AM

வேளாண்மை, உற்பத்தி, தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடம்; திறமையற்ற அரசே காரணம்: அன்புமணி

வேளாண்மை, உற்பத்தி, தொழில் என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான் காரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "100 நாள் சாதனை என்று ஊடகங்களில் விளம்பரங்களை வாரி இறைத்தாலும், விதிக்கப்பட்டது என்னவோ அனைத்துத் துறைகளிலும் கடைசி இடம் தான் போலிருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியமான உழவு, உற்பத்தி, தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள "இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேடு: 2016-17" என்ற தலைப்பிலான ஆவணத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் துறை சார்ந்த வளர்ச்சி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிலையான விலைக்குறியீடுகளின் அடிப்படையில் வேளாண்துறை வளர்ச்சியில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அம்மாநிலம் வேளாண் துறையில் வியக்கத்தக்க வகையில் 27.04% வளர்ச்சியை ஈட்டியிருக்கிறது. அடுத்ததாக அண்டை மாநிலமான தெலுங்கானா 19.07% வளர்ச்சியும், ஆந்திரா 9.20% வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் வேளாண்துறை மைனஸ் 8.00% வளர்ச்சியடைந்து இருக்கிறது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மைனஸ் 3.50% வளர்ச்சியை சந்தித்த தமிழக வேளாண்துறை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது என்பது வேதனை அளிக்கிறது.

2014-2015 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.49,409 கோடியாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் ரூ.47,678 கோடியாகவும், கடந்த ஆண்டில் ரூ. 43,871 கோடியாகவும் சரிந்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் வேளாண் உற்பத்தி 2010-11ஆம் ஆண்டில் இருந்த அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மத்திய பிரதேசத்தின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.1,11,200 கோடியாகும். இது தமிழகத்தின் உற்பத்தி மதிப்பை விட கிட்டத்தட்ட 3 மடங்காகும். கடந்த ஆண்டு இந்தியாவை வாட்டி வதைத்த வறட்சிக்கு எந்த மாநிலமும் தப்பவில்லை. ஆனாலும் மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் வேளாண்மையில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதற்குக் காரணம் அம்மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள பாசனத் திட்டங்கள் தான். தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தாததால் தான் இரு ஆண்டுகளாக வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு வேளாண் துறையில் எதிர்மறை வளர்ச்சியை அடைந்துள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தித் துறையை எடுத்துக் கொண்டால் அதிலும் தமிழகத்திற்கு கடைசி இடம் தான். 2015-16 ஆம் ஆண்டில் ரூ.1,38,368 கோடியாக இருந்த உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டில் வெறும் 2280 கோடி மட்டுமே அதிகரித்து ரூ.1,40,648 கோடியாக உயர்ந்துள்ளது. இது வெறும் 1.64% வளர்ச்சியாகும். அதேநேரத்தில் உற்பத்தித் துறையில் ஆந்திரம் 10.36% வளர்ச்சியுடன் முதலிடத்தையும், மத்தியப் பிரதேசம் (7.41%), தெலுங்கானா (7.10%) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களையும் பிடித்துள்ளன. பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத புதுச்சேரி கூட உற்பத்தித் துறையில் 2.40% வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், தமிழகம் அதில் மூன்றில் இரு பங்கு வளர்ச்சியை மட்டும் தான் எட்டிப்பிடிக்க முடிந்திருப்பது அவலத்திலும் அவலமாகும்.

தொழில்துறையில் தமிழகத்தின் வளர்ச்சி சற்று அதிகமாக இருந்தாலும் கூட அதிலும் தமிழகத்திற்கு கடைசி இடமே கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் தொழில் உற்பத்தி மதிப்பு ரூ.3,06,317 கோடியிலிருந்து ரூ.3,18,497 ஆக உயர்ந்திருக்கிறது. இது வெறும் 3.97% வளர்ச்சி மட்டுமே. அதேநேரத்தில் ஆந்திரம் 10.06% வளர்ச்சி பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது. தெலுங்கானா 7.55% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், மத்தியப் பிரதேசம் 5.98% வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்த நிறுவனங்களையும், தமிழகத்தில் தொழில் செய்து வந்த நிறுவனங்களையும் ஊழல் என்ற ஆயுதம் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விரட்டியடித்ததன் பயனைத் தான் தமிழகம் இப்போது அனுபவிக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு இரு முக்கியக் காரணங்கள் ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான். அனைத்து நிலைகளிலும் பரவிக்கிடக்கும் ஊழல் காரணமாக அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழில்துறை மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்தித் துறையின் பயணப் பாதை ஆண்டுக்கு ஆண்டு மாறி வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் புதியக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த தமிழக அரசுக்கு திறமையோ, துணிவோ இல்லை.

தமிழகத்தில் வேளாண்மை என்பது புறக்கணிக்கப்பட்ட துறையாக மாறி வருகிறது. பருவமழையை நம்பியே சாகுபடி செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கும் சூழலில், மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதற்கான திட்டங்களோ, ஆர்வமோ தமிழக ஆட்சியாளர்களிடம் இல்லை. அதுகுறித்த யோசனைகளை வழங்கினாலும் அதை பொருட்படுத்தாததன் விளைவு தான் தமிழகம் இன்று வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்த வீழ்ச்சியை தடுக்கும் சக்தியும், திறனும் பினாமி அரசுக்கு இல்லாத நிலையில், இந்த அரசை அகற்றி விட்டு, வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் திறன் கொண்டவரின் தலைமையில் புதிய அரசை அமைப்பதே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்"

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x