

திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் பூட்டிக்கிடக்கும் எரிவாயு தகனமேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு நெய் விளக்கு தோப்பு என்ற பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளி மயானம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இப்பகுதியில், நாளடைவில் ஏற்பட்ட மக்கள்தொகை பெருக்கத்தால் நூற்றுக்கணக்கில் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
இதனை கருத்தில்கொண்டு, நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க முடிவெடுத்தபோது, நெய்விளக்கு தோப்பில் உள்ள மயான பகுதியைத் தேர்வு செய்து கடந்த 2006- 2007-ம் நிதியாண்டில் ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது.
எரிவாயு தகனமேடைக்கான அனைத்து பணிகளும் முடிந்தும், எரியூட்டும் பணியை மேற்கொள்வதற்கான உரிமம் வழங்குவதில் நகராட்சி உரிய முடிவு எடுக்காததால் இந்த எரிவாயு தகனமேடை திறக்கப்படாமல் உள்ளது.
கடந்த 6-ம் தேதி நடத்தப்பட்ட நகர்மன்ற கூட்டத்தில் தஞ்சையைச் சேர்ந்த தனியார் அமைப்புக்கு அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் இடம்பெற்றிருந்தது. ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் தீர்மானம் நிறைவேறவில்லை.
இதனிடையே, திருவாரூர் நகராட்சிப் பகுதியில் உள்ள மயானங்களில் சடலங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 11 தொழிலாளர்கள், தங்களுக்கு உரிமம் வழங்கினால் நகராட்சியின் வழிகாட்டலின்படி நாங்களே பராமரிக்கத் தயாராக உள்ளோம். இதன்மூலம் எங்களுக்கும் தொழில் உத்தரவாதம் கிடைக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மயானத் தொழிலாளி பி.கே.செல்வம் கூறியபோது, “திருவாரூரில் உள்ள பல மயானங்களில் சுற்றுச்சுவர் இடிந்துவிட்டது. தண்ணீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் பராமரிக்கப்படவில்லை. பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு எரிவாயு தகனமேடையை பயன்படுத்தும் பயிற்சியளித்து, உரிமத்தை எங்களுக்கு வழங்குமாறு நகராட்சிக்கும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.
நெய்விளக்கு தோப்பு பசுபதி கூறியபோது, “கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் இந்த எரிவாயு தகனமேடை பூட்டிக்கிடக்கிறது. அருகில் உள்ள பழைய மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்துவிட்டது. அதனால் திறந்தவெளி மயானமாகிவிட்ட பழைய மயானத்தில் மாலை நேரங்களில் சடலம் எரிக்கும்போது அவ்வழியாகச் செல்வதற்கு சிறுவர்களும், பெண்களும் அச்சப்படுகின்றனர். சடலத்தை எரியூட்டப்படும்போது வீசும் துர்நாற்றம் குழந்தைகள், கர்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எரிவாயு தகனமேடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
நுகர்வோர் அமைப்பு நிர்வாகி காந்தி கூறியபோது, “திருவாரூரில் உள்ள 11 சுடுகாடுகளைச் சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. இதனால் உடல்களை எரியூட்டும்போது ஏற்படும் புகையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நெய்விளக்கு தோப்பு பகுதி மக்கள் இப்பகுதி குப்பைக் கிடங்கிலிருந்து வீசும் துர்நாற்றத்துடன், சடலம் எரியூட்டும்போது ஏற்படும் புகையையும் சுவாசிப்பதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து எரிவாயு தகனமேடையை திறக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.