

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் குப்பன்(50). சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டிவந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமைந்தகரை பெருமாள் கோயில் அருகே அவரது ஆட்டோ திருடுபோனது. இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் குப்பன் புகார் செய்தார்.
இந்நிலையில் குப்பனின் நண்பர் பாலு என்பவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை அண்ணா ஆர்ச் அருகே நள்ளிரவு 1 மணியளவில் குப்பனின் ஆட்டோ சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அப்பகுதியில் அரும்பாக்கம் போலீஸார் ரோந்து வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் பாலு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீஸார் ஆட்டோவை விரட்டிச் சென்று நடுவன்கரை பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். அதை ஓட்டியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்தவர் திருவேற்காடு அன்பு நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(19) என்பதும், குப்பனின் ஆட்டோவை அவர் திருடியதும் தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆட்டோவை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளர் ஏழுமலை, ஊர்க்காவல் படை வீரர் சரவணன் ஆகியோரை கூடுதல் ஆணையர் கருணாசாகர் பாராட்டினார்.