

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணை நடைபெறுகிறது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கலாகும் மனுக்களை அதே நீதிபதிதான் (ஓய்வுபெறாத நிலையில்) விசாரிக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நீதிபதிகள் மாறுவதால் சீராய்வு மனுக்களை பிரதான மனு மீது உத்தரவு பிறப்பித்த அதே நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்ற முறையை பின்பற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய அதே நீதிபதி மீண்டும் நியமிக்கப்படும் வரை மனுதாரர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்த சிரமங்களைப் போக்குவதற்காக சென்னை, மதுரையில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுக்களை சம்பந்தப்பட்ட நீதிபதி எங்கு பணியில் இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்து முடிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அறை-20, உயர் நீதிமன்ற கிளையில் 3-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கிலும் வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணிபுரியும் நீதிபதி ஆர்.மகாதேவன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிந்தபோது பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மதுரையில் தாக்கலான மனுவை சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிற்பகல் விசாரிப்பார். மதுரையில் வழக்கறிஞர்கள் வைக்கும் வாதங்களைக் கேட்டு நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.
சீராய்வு மனுக்களைப்போல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களையும் பிரதான மனு மீது உத்தரவு பிறப்பித்த அதே நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். இதனால் முக்கிய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.