

திமுக தலைவர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வார்த்தைகள் அடங்கிய பேனர்களை பொது இடங்களில் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பியிடம் திமுக சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி, திங்கள்கிழமை டிஜிபியிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: சென்னையின் பல்வேறு இடங்களில், சமீபகாலமாக திமுக தலைமையை விமர்சித்தும், திமுக தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
சமீபத்தில், காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா படத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களில், திமுக தலைமையை விமர்சிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோல், பல இடங்களில் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் பேனர்கள் ஏற்கனவே வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பிரச்னையில், தமிழ்நாடு நகர்ப்புறங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதியளிக்கும் சட்டம் 2011-ன் படி, மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார். எனவே, பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டரீதியாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க திமுக முடிவு செய்துள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.