

சட்டப்பேரவையில் நேற்று பால் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சண்முகநாதன் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘‘அதிமுக தேர்தல் அறிக்கை யில், மகளிர் மற்றும் குழந்தை களுக்கு வைட்டமின் ஏ, டி மற்றும் இரும்பு சத்து கொண்ட பால் ஒரு லிட்டர் ரூ.25-க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
3 மாதமாக பால் விலையைக் குறைக்கவில்லை. மேலும், பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே பெற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வருமா?’’ என்று கேட்டார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, ‘‘பால் உற்பத்தி யாளர்கள் உற்பத்தி செய்யும் பாலில் 20 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய் கிறது. முழுமையாக பாலை கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், ‘‘ பால் கொள்முதலை பொறுத்தவரை, சில்லறை வியாபாரிகள் தரமற்ற பாலை கூட்டுறவு சங்கங்களில் விற்க முயற்சிக்கின்றனர். தரமற்ற பாலை அரசு கொள்முதல் செய்ய முடியாது’’ என்றார்.