

அரபிக் கடலில் குஜராத்திலிருந்து 560 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கும் அதிதீவிர புயலான ‘நிலோபர்’ கரையை கடந்த பிறகுதான், தமிழகத்துக்கு மழை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலோபர் புயல் குஜராத் மாநிலத் தின் நிலையா என்ற பகுதியிலிருந்து 560 கி.மீ. தூரத்தில் வட கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது அதிதீவிர புயலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் வலுவிழந்து புயலாக மாறும். பின்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை காலை குஜராத் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் வலுவிழந்து, கரையை கடந்த பிறகு, அரபிக் கடலின் தென் திசையில் தமிழகத்துக்கு மழை தரும் வகையில் வானிலையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங் களில் மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட் டங்களில் அநேக இடங்களில் மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக் கூடும்.
நத்தத்தில் 8 செ.மீ.
வியாழக்கிழமை காலை பதிவான மழை அளவின்படி தமிழ கத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 8 செ.மீ., மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 7 செ.மீ., மதுரை மாவட்டம் சோழ வந்தான், மேட்டூர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 6 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.