Published : 27 Apr 2017 08:24 AM
Last Updated : 27 Apr 2017 08:24 AM

3 மாதங்களில் ‘நீரா’ பானம் விற்பனைக்கு வரும்: முதல்வரை சந்தித்த பின்னர் விவசாயிகள் தகவல்

தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’பானம் எடுக்க தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள், ‘‘3 மாதங்களில் ‘நீரா’ பானம் விற்பனைக்கு வரும். இதனால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படாது’’ என்று தெரிவித்தனர்.

அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தென்னை மரங்களில் இருந்து ‘நீரா’ பானம் தயாரிப்புக்கு கடந்த வாரம் அரசு அனுமதியளித்தது.

‘நீரா’ உற்பத்தியை நெறிமுறைப் படுத்த, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நோய் எதிர்ப்பு திரவத்தைப் பயன்படுத்தி, ‘நீரா’ உற்பத்தி அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்ட மைப்பினர் அதன் தலைவர் சக்திவேல் தலைமையில், நேற்று முதல்வர் எடப் பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, சட்டப் பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் இருந்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:

தமிழக தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ‘நீரா’ பானம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க அனுமதியளிக்கும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நிறைவேற்றித் தர உத்தரவாதம் வழங்கியுள்ளார். ‘நீரா’ பானம் தென்னை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரும். வைட்டமின் ஏ, பி, சி மற்றும் சர்க்கரை சத்து குறைவாகக் கொண்ட பானம், இதை மக்கள் அதிகளவில் வாங்கிப் பருகுவார்கள். ‘நீரா’ பானத்தை இறக்கி, சந்தைப்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கையில் இருந்து ‘நீரா’ அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இனி தமிழக விவசாயிகளும் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இது போதைப் பொருள் கிடையாது. சர்க்கரை சத்து குறைவான, தாய்ப்பாலுக்கு இணையான பானம். இதை அருந்தினால் மக்கள் ஆரோக்கியமாக வாழலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த பானம். டெட்ரா பேக்கில் அடைக்கப்பட்டு விற்கப்படும். இங்கு பயன்படுத்தப்படும் குளிர்பானங்களில், ‘நீரா’தான் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணியையும் ‘நீரா’ பானம் ஈட்டித்தரும். கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்தவர்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தி யாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் செல்லத்துரை கூறியதாவது:

தமிழகத்தில் 1.5 லட்சம் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். தமிழகத்தில் ‘நீரா’ உற்பத்திக்கு முன்பு அனுமதி இல்லை. தமிழக முதல்வர் ‘நீரா’ எடுக்க தற்போது உரிமம் வழங்க அனுமதியளித்துள்ளார். பொள்ளாச்சியில் இன்னும் 3 மாதத்தில் ‘நீரா’ தயாரிக்க தொழிற்சாலைக்கான அனுமதியை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார். 3 மாதத்தில் சந்தையில் இது கிடைக்க உள்ளது. பொள்ளாச்சியிலும், தஞ்சையில் ராஜேந்திரபுரத்திலும் ‘நீரா’ உற்பத்தி தொழிற்சாலைகள் அமைவதற்கு தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். 25 ஆயிரம் லிட்டர் ‘நீரா’ தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 12 ஆயிரம் மரங்களில் கிடைக்கும். தமிழகத்தில் 15 கோடி தென்னை மரங் கள் உள்ளன. எனவே, தேங்காய் உற்பத்தி யில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு மாதத்தில் 6 மாதங்கள் மட்டும் குலை கட்ட முடியும். அடுத்த 6 மாதங்களில் தேங்காய் உற்பத்தி அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x