

பெரியகுளம் நகரின் மையப் பகுதியில் வராக நதியில் கழிவுநீர் கலப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரை வடகரை, தென்கரை என இரண்டாகப் பிரிக்கிறது வராகநதி. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தெளிந்த நீராக ஓடிய வராக நதியின் இன்றைய நிலை, பார்ப்போரை கண்கலங்கவைக்கும் வகையில் உள்ளது. சென்னையில் ஓடும் கூவம் நதி இடம்பெயர்ந்து இங்கு வந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு, சாக்கடைகளின் சங்கமமாக வராக நதி மாறிவிட்டது.
வராகநதியின் இருகரைகளிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட படித்துறைகள் இன்றும் உள்ளன. ஆனால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு ஊரில் உள்ள கழிவுநீர் எல்லாம் வராகநதியில்தான் வந்து கலக்கிறது. அதோடு குப்பைகளும் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மக்கள் குளித்து மகிழ்ந்த வராக நதி, தற்போது பன்றிகளின் வசிப்பிடமாக மாறிவிட்டது. இவற்றின் மூலம் நோய் பரவுகிறது.
இதுகுறித்து பெரியகுளத்தை சேர்ந்த எஸ்.தனபாலன் கூறிய தாவது:
நான் சிறுவனாக இருந்தபோது வராகநதியில் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தை கழுவுவோம். அந்த அளவுக்கு தெளிந்த நீரோடையாக தண்ணீர் சென்றது. இன்று நதிக்குள் கால் வைக்க முடியவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வராகநதியில் சிறுநீர் கழிப்போருக்கு 50 பைசா அபராதம் விதித்தது உள்ளாட்சி நிர்வாகம். அந்த அளவுக்கு நதியை சுகாதாரமாக உள்ளாட்சி நிர்வாகமும், மக்களும் காத்துவந்தனர். தற்போது நகராட்சி நிர்வாகமே நதியில் கழிவுநீரை கலக்கும் பணியை மேற்கொள்கிறது. நதிக்கரை யோரங்களில் மக்கள் குப்பைகளை கொட்டு கின்றனர்.
நதியில் தேங்கியிருக் கும் கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. வரும் தலைமுறையினராவது இந்த நதியை மீட்டெடுக்கவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர் களின் ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும்வரை வேறு வழியில்லை என்று கூறிவிட்டனர். பாதாளச் சாக்கடை பணிகளை விரைவுபடுத்தி வரு கின்றனர்.
இப்பணி முடிவடைந்ததும், நதியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் குறைந்துவிடும். நதியை பாதுகாக்க, அதன் கரைகளில் சுவர் எழுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.
எஸ்.தனபாலன்