Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

யாருக்காகவும் பாரதிய ஜனதா காத்திருக்காது- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

‘தேர்தல் கூட்டணி தொடர்பாக, தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் யாருக்காகவும் பா.ஜ.க. காத்திருக்காது’ என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. அதேநேரத்தில், யாருக்காகவும் பா.ஜ.க. காத்திருக்காது. பா.ஜ.க.வை மதவாத கட்சி எனக் கூறுகின்றனர். எங்கள் கூட்டணியில் அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளது. ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவையும் உள்ளன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை அனுபவித்ததை மறந்துவிட்டன. திருமாவளவன் கூட எங்கள் கூட்டணியில் இருந்தவர்தான்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. தங்கள் கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதை வைத்து ஆதாயம் தேட நினைக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பா.ஜ.க. கூட்டணி வேரறுக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கிய பிறகு பா.ஜ.க. எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தெரியும்.

நான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். பா.ஜ.க.வின் வேட்பாளர்கள், மக்களுக்காக போராடும் எண்ணம் படைத்தவர்களாக இருப்பர். 300-க்கும் மேற்பட்ட இடத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இலங்கைப்போரில் அப்பாவித் தமிழர்கள் இரண்டரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் ஆணவத்துக்கு முடிவு கட்டப்படும், என்றார்.

பா.ஜ.க. தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.டி.செந்தில்வேல், திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x