95 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

95 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் -  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

95 வயதான சுதந்திரப் போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் வழங்க டிசம்பர் 6-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சோழபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்எம்.ராஜகோபால் (95) . சுதந்திரப் போராட்ட தியாகியான இவர், மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை தனக்கு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரர் ராஜகோபாலுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

ஓராண்டுக்குப் பிறகும் ஓய்வூதியம் வழங்கப்படாததால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜகோபால் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் (தியாகிகள் ஓய்வூதியப் பிரிவு) துணைச் செயலாளர் மஹாவீர் பிரசாத், சார்பு செயலாளர் அமர்சந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தங்களுக்கு மேலும் அவகாசம் தர வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜி.மாசிலாமணி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதற்கு முன் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான உரிய உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த விசாரணையின்போது மத்திய உள்துறை இணைச் செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in