

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லாதது கவலை அளிக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்துள்ளது. இது கால தாமதமானது என்றாலும் கூட இந்த அறிவிப்பின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய, சேர வேண்டிய நிவாரணம், சலுகைகள் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும்.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லாதது கவலை அளிக்கிறது. கால்நடைகளுக்கு ஒதுக்கிய 78 கோடி ரூபாய் போதுமானதல்ல. கூடுதலான தொகை வழங்கிட வேண்டும்
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு. இது போதுமானதல்ல. கூடுதலாக வழங்கிட வேண்டும். காரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைத்துவிதமான பயிர்களுக்கும் கடன் வாங்கி செய்த செலவுத் தொகை அறிவித்த தொகையை விட பல மடங்கு அதிகம். எனவே கூடுதலான தொகை வழங்கிட வேண்டும்.
மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் நாட்களை 100 லிருந்து 150 நாட்களாக அதிகரித்திருப்பது போதுமானதல்ல. இதனை 200 நாட்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். மேலும் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படாமல் உள்ளதால், அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் பயிர்க்கடனை மத்திய காலக் கடனாக மாற்றியது ஏற்புடையதல்ல. விவசாயிகள் எதிர்பார்த்த - கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
அது மட்டுமல்ல விவசாயப் பாதிப்பால் கடந்த 2 மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்ற நிலையில் 17 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக அறிவித்திருப்பது உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை. எனவே மாவட்டம் தோறும், ஊர் ஊராக கணக்கெடுத்து உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 3 லட்சம் மட்டும் நிவாரணம் தருவதாகவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது போதுமானதல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு வறட்சி மாவட்டமாக காலம் தாழ்ந்து அறிவித்திருந்தாலும், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும், வாடிய பயிர்களையும், வறண்ட நிலங்களாக மாறியதையும் துல்லியமாக மத்திய அரசுக்கு தெரிவித்து, அதற்குரிய முழுமையான நிவாரணத்தை காலம் தாழ்த்தாமல் பெறுவதற்கு மத்திய அரசுக்கு உடனடியாக விசாரணை மனு கொடுத்து வலியுறுத்த வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு நிவாரணமும், சலுகைகளும் வழங்கி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.