

அப்துல் கலாமின் கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த வருடம் ஜூலை 27-ம் தேதி ஷில்லாங் நகரில் மாணவர்கள் மத்தி யில் உரையாடிக்கொண்டு இருந்த போது காலமானார். கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேசுவரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் கலாம் நினை விடத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பாக கலாம் தேசிய நினைவகம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. கலாமின் முழு உருவச் சிலையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர், அறிவியல் கண்காட்சி யையும் அவர்கள் தொடங்கிவைத் தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் மத்திய இணை அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக தொழி லாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப் பினர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
ராமேசுவரம் ஒரு புனித நகரம். கலாமின் நினைவு நாளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியும் ஒரு புனிதமான நிகழ்ச்சி. கலாம் நம்மிடம் விட்டுச் சென்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் சாதனைகள் மூலம் நம்முடைய இதயங்களில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இதயத்தில் வாழும் கலாமுக்கு எதற்கு தேசிய நினைவகம் என்று கேட்கலாம். இந்த நினைவகம், கோவில், மசூதி, தேவாலயம் போல வருங்கால சந்ததியினருக்கு இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொல்வதற்காக எழுப்ப வேண்டியுள்ளது.
நம் நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், குடியரசுத் தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருக் கிறார்கள். ஆனால் கலாம் அவர்களில் இருந்து மாறுபட்டவர். திருமணம் செய்துகொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியை மணமுடித்தவர் கலாம்.
ராமேசுவரம் கலாமின் ஆன்மாவுடன் கலந்த நகரம். கலாம் இந்த மண்ணில்தான் நடந்து சென்றார் என்று நினைக்கும் போதே பெருமையாக உள்ளது. இதற்காகவே ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற் காக ராமேசுவரம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இதற்காக ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலாமின் கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும் என்றார்.
முன்னதாக பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கலாம் மறைந்த போது நினைவிடம் கட்டவும் பிறகு தேசிய நினைவகம் அமைக்க கூடுதல் இடமும் அளித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.