Published : 30 Mar 2014 12:27 PM
Last Updated : 30 Mar 2014 12:27 PM

இனம் படத்தை திரையிடக் கூடாது: வைகோ காட்டம்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு களங்கம் செய்யும் 'இனம்' படத்தை, தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

'இனம்' (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். 'பயங்ரவாதி' என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.

இப்பொழுது அவர் இயக்கிய 'இனம்' எனும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அதுகுறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.

ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத் தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.

சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன. அச்சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.

பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குளத்துத் தண்ணீரில் அந்தப் பெண் நிற்கும்போது உடைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலையின் தலையும் முகமும் கரையில் தெரியும் வகையில் காட்டப்பட்டுள்ளது.

இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.

இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான் நோக்கம் ஆகும்.

இலங்கையில் கடந்த 66 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கும், போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டதற்கும், ஐ.நா. சபை பிரதிநிதிகள் தாக்கப்பட்டதற்கும், இரத்த வெறிபிடித்த புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.

2170 இந்து கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தகர்க்க புத்து பிட்சுகளே ஏவினார்கள். கிறித்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டதற்கும், அண்மைக் காலமாக இசுலாமிய மசூதிகள் தாக்கப்படுதற்கும் முழுக்க முழுக்க புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.

இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.

மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ் சிவன் படத்தை இயக்கி உள்ளார்.

சமீப காலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நிருபிக்கின்றன. அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கோர காட்சிகளை கண்களால் காண முடியாது. அந்த சம்பவம் பற்றி நாவால் கூற முடியாது. காதுகளால் கேட்க முடியாது.

நெஞ்சு கொதிக்கிறது. தன்மானத் தமிழ் இரத்தம் துடிக்கிறது. மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?

தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?

இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.

உன்னதமான திரைக் காவியங்களை நான் பெரிதும் மதிப்பவன். ஏன், மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'செம்மீன், வடக்கன் வீரகதா 1921, நாயர் ஷாப், துலாபாரம், பழசிராஜா' போன்ற படங்கள், சிறந்த கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்கள் போன்றவற்றின் பரம இரசிகன் ஆவேன் நான். மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.

ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் 'இனம்' எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

இதனிடையே, திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு 'இனம்' திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வைகோ கடிதம் அனுப்பி உள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x