

தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜனின் 1029-வது சதயவிழா நவ.1-ல் தொடங்கி நடைபெற உள்ளது.
தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் உள்ள சிற்பம், ஓவியம் மற்றும் கட்டுமான அமைப்பின் தன்னிகரற்ற தன்மை யால் “யுனெஸ்கோ” நிறுவனம் இதை உலகப் பாரம் பரியச் சின்னமாகவும் இந்திய அரசு தேசிய பாதுகாக் கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் அறிவித்துள்ளன.
மேலும், சைவ சமயத் தொண்டு, போர் வலிமை, ஆட்சி நிர்வாகம், சமய நல்லிணக்கம், கலைகளுக்கு ஊக்கமளித்தது என பன்முக ஆளுமை கொண்ட ராஜராஜனின் புகழைப் போற்றும் வகையிலும் உலகப் புகழ் பெற்றது இந்த கோயில்.
பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று ‘சதயவிழாவாக’ ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு ராஜராஜனின் 1029-வது சதய விழா நவ.1 அன்று காலையில் தொடங்கி நவ.2-ம் தேதி நள்ளிரவு வரை நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம், தேவார இசை, கலை நிகழ்ச்சிகள், தமிழறிஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பெருவுடையாருக்கு பேரபிஷேகம், திருமுறைகள் ஓதும் நிகழ்ச்சிகள், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்தல், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதையொட்டி, பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கும் பணி, மின் அலங்காரம், சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் சுற்றுலாத் துறை, தென்னகப் பண்பாட்டு மையம், கலை பண்பாட்டுத் துறை ஆகியன செய்து வருகின்றன.
இதையொட்டி, விழாக்குழு புரவலரும் மாவட்ட ஆட்சியருமான என். சுப்பையன், சதயவிழாக் குழுத் தலைவர் கு. தங்கமுத்து ஆகியோர் தலைமையில் பந்தல்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது.