Published : 10 Dec 2013 09:10 AM
Last Updated : 10 Dec 2013 09:10 AM

ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிப்பேன்! - மணல் புள்ளி சவால்

மணல் கிடங்கு மற்றும் விற்பனை நிலையங்களில், மணல் பதுக்கல் நடந்திருக்கிறதா என்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதால், பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மணல் விற்பனையாளர்கள்.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட, மணல் கிடங்குகள் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கல்லாறு சாலையில் உள்ள முருகன் மணல் சேமிப்பு மற்றும் விற்பனை நிலையத்தில், திங்கள்கிழமை மதியம் திடீர் சோதனை மேற்கொண்டார்.

சுற்றுவட்டார மணல் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளில், சட்டவிரோதமாக அதிகளவில் மணல் பதுக்குவதாகவும், கடற்கரையிலிருந்து கொண்டு வரப்படும் காஸ்டிங் மணல், கலக்கி விற்கப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததாம்.

அதற்காகவே, இந்த சோதனை நடந்ததாக, தாசில்தார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆய்வு நடந்த குறிப்பிட்ட மணல் கிட்டங்கியில், 64 யூனிட் மட்டுமே மணல் இருந்ததாகவும், அதை நீதிமன்ற உத்தரவுப்படியே இருப்பு வைத்துள்ளதாகவும், மணல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, அதிகாரிகள் உடந்தையாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமல் மணல் இருப்பு வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றார்களாம்.

மணல் லாரி உரிமையாளர்கள் கூறியது: மணலுக்கு இந்த மாதிரி நெருக்கடி, அரசு தரப்பில் வந்ததேயில்லை. மணல் புள்ளி ஒருவர், மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அரசியலுக்கு வரமாட்டேன். ஆனால், ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்கிற சக்தியாக இருப்பேன் என்று பேசினாராம்.

உளவுத்துறை காவல்துறை மூலம், மேலிடத்துக்கு இந்த அறிக்கை சென்றதாகவும், அவரைப்பற்றி விசாரித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்காக உளவுப்பிரிவு காவல்துறையினர், அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x