Published : 04 Jan 2014 12:25 PM
Last Updated : 04 Jan 2014 12:25 PM

மக்களை கொள்ளையடிக்கிறது மத்திய அரசு: ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கொள்ளையடிக்கும் செயல். இதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய ஆட்சியாளர்களுக்கு பொது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75.68 ஆகவும், டீசல் விலை ரூ. 57.93 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏழை- நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலரிலிருந்து 107 ஆக டாலராக குறைந்து விட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 115 டாலரிலிருந்து 116 டாலராக உயர்ந்து விட்டதாக ஓர் அப்பட்டமான பொய்யைக் கூறி பெட்ரோல் -- டீசல் விலையை உயர்த்தியிருப்பது பொது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதென மத்திய அரசு முடிவெடுத்த போதே, இதுபோன்ற மக்கள் விரோத செயல்கள் அடிக்கடி அரங்கேற்றப்படும் என்று நான் எச்சரித்திருந்தேன். அதேபோல் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மத்தியில் கடந்த 2009-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.44.24 ஆகவும், டீசலின் விலை ரூ.32.82 ஆகவும் இருந்தது. அதன்பின் கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலை 72 விழுக்காடும், டீசல் விலை 76 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் வருவாய் 25% கூட உயராத நிலையில், பெட்ரோல், டீசல் விலை இந்த அளவு அதிகரித்திருப்பதையும், அதனால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதையும் மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முறை சமையல் எரிவாயு விலை உயர்வு, இரு முறை பெட்ரோல் விலை உயர்வு, மூன்று முறை டீசல் விலை உயர்வு என மொத்தம் 7 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை மத்திய அரசு நடத்தியிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில் மீண்டும், மீண்டும் பெட்ரோல் & டீசல் விலையை உயர்த்துவது அப்பாவி மக்களைக் கொள்ளையடிக்கும் செயலாகும்.

மக்களின் தாங்கும் திறனை உணர்ந்து அதற்கேற்றவாறு அவர்கள் மீது சுமையை சுமத்துவது தான் நல்ல அரசுக்கு அழகாகும். ஆனால், மத்திய அரசோ மக்கள் வாழவே வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது தொடர்ந்து சுமைகளை அடுக்கி வருகிறது. இப்போக்கு சரியல்ல.

மக்களின் துயரங்களை உணர்ந்து, அவர்களின் சுமைகளை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கெல்லாம் பதிலடி தரும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியாளர்களுக்கு பொது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x