

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா
தமிழகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்த மாநிலங்களின் மக்களுக்கு எனது உள்ளம்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நல்ல தருணத்தில் தூய்மையான நம் இந்தியாவை அறிவு மற்றும் மனித மேம்பாடுகளை பெற்று நல்ல நிலைக்கு மேம்படுத்த உறுதி கொள்வோம். இப்பண்டிகை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம், வளமை மற்றும் வெற்றியை வழங்கட்டும்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
மக்களின் துன்பத்தை நீக்க எண்ணிய அன்னை, 9 நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். நவராத்திரி நாட்களில் தேவியர் மூவரையும் உளமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம். விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று, தர்மம் நிலைநாட்டப்படும்.
தமிழக மக்கள் கல்வியிலும் செல்வத்திலும் துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு உலகுக்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியை போற்றி வணங்கி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.