

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம், வார்தா புயல் நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. ஏற்கெனவே மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரும்போது தமிழக மக்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு மீதும், தமிழக முதல்வர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இத்திட்டத்தை கைவிட்டோம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை உருவாக்கியுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மையான தண்ணீரை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரசியல் இருக்கக் கூடாது. இத்தேர்வில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க வேண்டும். மக்களிடம் செல்வாக்கு இல்லாத மாநில அரசு தற்போது இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதை மக்கள் ஏற்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்ப்பது தமிழக அரசின் கடமையாகும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மக்களின் மனநிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுப் போம். வரும் 20-ம் தேதியில் இருந்து 16 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.