Published : 04 Jan 2017 08:22 PM
Last Updated : 04 Jan 2017 08:22 PM

விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிக்கட்டு: தீர்வுக்கு முதல்வரிடம் வலியுறுத்திய ஸ்டாலின்

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று (04-01-2016) முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியினாலும் தொடர்ந்து உயிரிழப்பது குறித்தும், விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்து, கோரிக்கை மனு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 5 பேர், 6 பேர், 7 பேர் அல்லது 10 பேர் என்று தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்கதையாகி உள்ளது. காவேரி நீர் முறையாக கிடைக்காத காரணத்தாலும், மழை பொய்த்திருக்கும் காரணத்தினாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதை அடிப்படையாக வைத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், அதற்கு ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும், என்று தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளை சார்ந்திருக்கக்கூடியவர்கள், அதேபோல விவசாய அமைப்புகளில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்தி, வற்புத்தி, வலியுறுத்தி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல, தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிதியுதவி செய்திட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம். அதேபோன்று, இந்த ஆண்டிலாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று, தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட வேண்டும், அதற்கு மாநில அரசு மத்திய அரசிடம் முறையான அழுத்தத்தைக் கொடுத்து, அதனை நிறைவேற்றுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம்.

கேள்வி: அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களை நீங்கள் வெளியிட்டிருப்பதாக தெரிவித்து உள்ளது பற்றி, உங்கள் கருத்து என்ன ?

ஸ்டாலின்: இன்றைக்கும் கூட மாண்புமிகு முதலமைச்சரை சந்தித்தபோது, ஜல்லிக்கட்டு பற்றி பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் ஒரு சூழல் வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வகுத்து தந்த அந்த விதிமுறைகளை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ஒரு அவசர சட்டத்தை, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்து, அந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு திமுக ஆட்சியில் முறையாக நடைபெற்றது என்று தெரிவித்தோம். அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. அதை எங்கு வேண்டுமானாலும் வந்து நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். அதேசமயம், அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை திமுக ஆட்சி பின்பற்றியதை போல அதிமுக ஆட்சி பின்பற்றவில்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி முறையாக விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தான் தடை விதிக்கப்படும் சூழ்நிலை வந்திருக்கிறதே தவிர வேறல்ல. இதுதான் உண்மை. அதையும் நாங்கள் மாண்புமிகு முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லி, ஜல்லிக்கட்டு முறையாக நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்து வைத்திருக்கிறோம்.

கேள்வி: காவேரி டெல்டா பகுதிகளில் தினசரி 5 பேர் அல்லது 10 பேர் என விவசாயிகள் தொடர்ந்து செத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் முதலமைச்சரும், இந்த அரசும் எதையும் கண்டு கொள்ளாமல், இவ்வளவு மெத்தனமாக இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?

ஸ்டாலின்: அதற்காகத்தான் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும், தீர்மானம் போட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதுமட்டுமல்ல, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களது பிரச்சினைகளை கேளுங்கள், இதுகுறித்து எல்லாம் மத்திய அரசை சந்தித்து முறையிட வேண்டும் என்றால், தமிழகத்தில் எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் எல்லாம் முதலமைச்சர் தலைமையிலேயே வருவதற்கும் தயாராக இருக்கிறோம், எனவே அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து, விவசாயிகள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்ற அடிப்படையில், தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, இதையெல்லாம் நேரடியாக வந்தும் பேசியிருக்கிறோம். எனவே, நல்ல முடிவு வரும் என்று நாங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x