Published : 28 Feb 2014 12:00 AM
Last Updated : 28 Feb 2014 12:00 AM

சென்னையில் ராஜீவ் சிலைகள் உடைப்பு: காங்கிரஸார் மறியல்

சென்னையில் சில இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் தொடர்பாக தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

இதில் வன்முறை வெடித்ததில் பலர் காயம் அடைந்தனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவன், ராயப்பேட்டை, அண்ணா சாலையில் பதற்றமான நிலை காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய பிரச்சினை மாலை 4 மணி வரை நீடித்தது.

மர்ம நபர்கள் கைவரிசை

இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது. வேப்பேரி காவல் நிலையம் அருகே ராஜீவ் காந்தி மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையின் முகத்தை மர்ம நபர்கள் உடைத்து விட்டனர்.

உடைந்த பாகங்கள் சிலை அருகிலேயே கிடந்தன. இதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர், சிலை முன்பு வியாழக்கிழமை காலை கூடினர். பின்னர் ஈ.வி.கே.சம்பத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேப்பேரி போலீஸார் சமாதானப்படுத்தியதால் மறியலை கைவிட்டனர்.

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புரசைவாக்கம், பட்டாளம் ஆகிய 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உள்ளன. இந்த சிலைகளின் தலைகளை மர்ம நபர்கள் கம்பியால் அடித்து உடைத்துள்ளனர். இதையடுத்து, பட்டாளம் அருகிலும் காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்தனர். காலை 9 மணிக்கு நடந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பெரம்பூர் போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை நிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சிலர் மறியல் செய்தனர். அவர்களை ரயில்வே போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

டிஜிபியிடம் நேரில் மனு

டிஜிபி ராமானுஜத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து, ராஜீவ் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் டிஜிபி அலுவலகம் எதிரே நின்று கோஷம் எழுப்பினர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

போரூர் பள்ளிக்கூட தெருவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. புதன்கிழமை இரவு 1 மணி அளவில் காரில் 4 பேர் வந்துள்ளனர். ஒரு பெட்ரோல் குண்டை அலுவலகத்துக்குள் வீசிவிட்டு சென்றனர். அது வெடிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சீமான் வீடு முற்றுகை

வளசரவாக்கம் சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வீடு உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கல்வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரஸார் திட்டமிட்டனர்.

இதற்காக, வளசரவாக்கம் நகர காங்கிரஸ் தலைவர் பாலமுருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் வளசரவாக்கம் நகராட்சி அலுவலகத்திலிருந்து சீமான் வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பரபரப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன், நாம் தமிழர் கட்சி அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x